
– முனீரா அபூபக்கர் –
ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தின் புதிய செயலாளராக – இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான எம்.டப்ளியூ. ஜகத் குமார இன்று (10) தனது கடமைகளை ஆரம்பித்தார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பொது முகாமைத்துவப் பட்டதாரி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் பட்டதாரி ஆவார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரியான ஜகத் குமார, இதற்கு முன்னர் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், வீடமைப்பு அமைச்சு உட்பட பல அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ஜகத் குமார இந்தப் பதவியை ஏற்பதற்கு முன்னர், நாடாளுமன்றத்தில் அரசாங்கக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அலுவலகத்தில் உதவிச் செயலாளராகவும், பிரதமர் அலுவலகத்தில் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இவர் முன்னர் இலங்கை நிர்வாக சேவையின் மூன்றாம் வகுப்பில் இணைந்துள்ள முகாமைத்துவ சேவை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.
அரச சேவையில் 25 வருட அனுபவமுள்ள ஜகத் குமார, தற்போது ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தில் நாடாளுமன்ற விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சிரேஷ்ட அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, ராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி, ஜனாதிபதியின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



