ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 03 ஆயிரத்தை நெருங்குகிறது: சர்வதேச உதவிகளை கோருகிறது ஐ.நா

🕔 October 10, 2023

ப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தின் அளவு பேரழிவு தருவதாகவும், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு ஆதரவை கோருவதாகவும் அகதிகளுக்கான ஐ.நா. ஆணையாளர் அலுவலகம் இன்று (10) செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது.

“பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் மற்றும் பங்காளர்கள் முக்கியமான உதவிகளை வழங்குவதிலும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதிலும் களத்தில் உள்ளனர்” என்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்காக உலக சுகாதார அமைப்பு, உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட பிற ஐ.நா அமைப்புகளின் குழுக்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தன.

ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குறைந்தது 11,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றும் அவர்களுக்கு மருத்துவ சேவைகள், அவசரகால தங்குமிடம், உணவு, தண்ணீர் மற்றும் பாதுகாப்பை வழங்கப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

கடந்த வார நிலநடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3,000 ஐ நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜிந்தா ஜன் மற்றும் கோரியன் மாவட்டங்களில் உள்ள 20 கிராமங்களில் சுமார் 2,000 வீடுகள் நிலநடுக்கத்தில் இடிந்ததாக, காபூலில் நடந்த ஊடக சந்திப்பில் – அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செய்தித் தொடர்பாளர் முல்லா ஜனன் சாய்க் கூறியுள்ளார்.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவுமாறு – அவர் சர்வதேச சமூகத்தை கேட்டுக் கொண்டார்.

சனிக்கிழமையன்று, 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் ஆப்கானின் இரண்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்