அறிவிப்பாளரும் எழுத்தாளருமான ஒலுவில் வஹாப்தீனின் சிறுகதை தொகுப்புக்கு தேசிய விருது

🕔 August 8, 2023

ழுத்தாளரும் வானொலி அறிவிப்பாளருமான ஒலுவில் கலைப்பிறை ஜே. வஹாப்தீன் எழுதிய
‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ சிறுகதைத் தொகுதி, 2022 ஆம் ஆண்டுக்கான ‘கொடகே தேசிய தமிழ் ஆக்க இலக்கியப் பிரதி’களுக்கான போட்டியில் -சிறந்த சிறுகதைத் தொகுதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா கொழும்பில் விரைவில் நடைபெறவுள்ளது.

இலங்கை வானொலி பிறை எப்.எம். அறிவிப்பாளரும் ஒலுவில் அல் – ஹம்றா மகா வித்தியாலய ஆசிரியருமான ஜே. வஹாப்தீன் – கவிதை, நாவல், ஆய்வு, நாடகம் , குறும்பா என பதின்மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் தேசிய சாஹித்திய விருதுகளைப் பல தடவை பெற்றுள்ளார்.

இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் கலாநிதிப்பட்ட ஆய்வு மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுதிய நூல்கள்

வேரில்லாப்பூச்சியங்கள் , அஷ்ரப் எனும் தீ, வெட்டுக்கற்கள் , கண்ணாடிக்குளத்து கவிதை , வெயிலில் ஒரு வீரப்பழம், முடக்கத்தான் முதலான கவிதை நூல்களையும் கலவங்கட்டிகள், குலைமுறிசல், தோறாப்பாடு முதலான நாவல்களையும் ஐந்து நாடகங்கள் எனும் நாடக நூலையும் ஒலுவில் பிரதேசத்து வெகுசனப் பாடல்கள், ஒலுவில் பிரதேசத்து கவிதைகளில் பண்பாட்டு அம்சங்கள் முதலான ஆய்வு நூல்களையும் தற்போது தேர்வாகியுள்ள ‘அவனுக்கும் சிறகுகள் உண்டு’ எனும் சிறுகதை நூல் என 13 நூல்களை வஹாப் எழுதியுள்ளார்.

அவலக் குரல், கந்தலாடை, கலங்கிய விழிகள், திசை மாறிய பறவை , பாடம் ஆகிய படங்களை இயக்கி நடித்து வெளியிட்ட வஹாப்தீன், பல நாடகங்களை எழுதி இயக்கி அரங்கேற்றியும் உள்ளார்.

இவரது கலை இலக்கியப் படைப்புக்களுக்காக இந்திய விருதுகளையும், தேசிய மற்றும் மாகாண விருதுகள் மற்றும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.

விருதுகள்

தனது கலவங்கட்டிகள் நாவலுக்காக ‘பெயாவே’ விருதைப் பெற்ற முதல் முஸ்லிம் எழுத்தாளர் இவராவார். இரண்டாம் முறையாக வழங்கப்பட்ட ‘பெயாவே’ விருதையும் தனது ‘குலைமுறிசல்’ நாவலுக்காக இவரே பெற்றார். மேலும் தனது ‘தோறாப்பாடு’ நாவலுக்காக இந்திய திருப்பூர் இலக்கிய விருதை வென்றார்.

இவை தவிர அறிவிப்புத்துறைக்கா ன ‘துருணு சக்தி’ விருதை ஜனாதிபதியின் கரங்களினால் வஹாப்தீன் பெற்றதோடு, 2021ஆண்டு பிறை வானொலியின் ‘சந்தனக்காற்று’ நிகழ்சிக்காக அரச வானொலி விருதையும் வென்றார்.

மேலும் தனது நாவல்களுக்காக இலங்கை அரசின் சஹித்திய மண்டல சான்றிதழ் மற்றும் கிழக்கு மாகாண இலக்கிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

கவிதை, சிறுகதை, நாடகங்கள், ஆய்வுப் போட்டிகளுக்காக பல தடவை – தேசிய மட்டத்தில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றதோடு சிறந்த ஆசிரியருக்கான கல்வி அமைச்சின் ‘குருபிரதீபா’ விருதினையும் பெற்றுள்ளார்.

நேயர்கள் மற்றும் நண்பர்களால் தமிழ்ச் சுடர், கலைச்சுடர், கலைஜோதி, கலைப்பிறை முதலான பட்டங்களால் கௌரவிக்கப்பட்ட ஜே.வஹாப்தீன் – மர்ஹும் ஆசுகவி அன்புடீன் அவர்களினால் ‘இலக்கியப் பிரகாசம்’ என கௌரவிக்கப்பட்டவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்