தலைப்புச் செய்திகள்

மு.காங்கிரஸில் ஹிஸ்புல்லாஹ் இணைந்தார்: ஹாபிஸ் நஸீரின் இடைவெளியை நிரப்ப ஹக்கீம் எடுத்த முடிவு

– அஹமட் –

முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் – முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம், ஓட்டமாவடி – காவத்தமுனையில் வைத்து இவர் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் முன்னிலையில் மு.காங்கிரஸில் இணைந்து கொண்டார் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

காத்தான்குடியைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினூடாக முதன் முதலில் நாடாளுமன்றம் சென்றார். இருந்தபோதும் பல தடவை அந்தக் கட்சியிலிருந்து விலகியும், பின்னர் இணைந்தும் ‘விளையாட்டு’க் காட்டியுள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலின் போது, ஐக்கிய சமாதான முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ஹிஸ்புல்லா, அதில் தோல்வியடைந்தார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் ஹிஸ்புல்லா போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் சில காலம் இவர் நெருங்கிச் செயற்பட்டார். அவர் கிழக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்தார்.

மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை, பொது வெளியில் மிகவும் மோசமாக தாக்கிப் பேசி வந்த நிலையிலேயே, தற்போது மு.காங்கிரஸில் ஹிஸ்புல்லாஹ் இணைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.காங்கிரஸ் ஊடாகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றுள்ள அந்தக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் அஹமட், மு.காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே, ஹிஸ்புல்லாஹ்வை மு.காங்கிரஸில் ஹக்கீம் இணைத்துக் கொண்டுள்ளதாக கூறப்டுகிறது.