சோனியா இடத்துக்கு புதியவர்: காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன் கார்கே

இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே தெரிவு செய்யப்பட்டுள்ளார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,000 வாக்குகள் கிடைத்தன.
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது.
சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியின் தலைமை பொறுப்பு பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் கைகளில்தான் இருந்து வந்துள்ளது அல்லது சில நேரங்களில் தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என காந்தி குடும்பத்தினர் (நேரு வழி குடும்பத்தினர்) முடிவு செய்த நிலையில், இந்த பதவிக்கு மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர் ஆகிய இரு தலைவர்கள் போட்டியிட்டனர்.
வாக்களிக்க தகுதியான 9,900 கட்சி பிரதிநிதிகளில் 9,500 பேர் வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் சபைத் தலைவர் அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து புதன்கிழமை முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் இடத்தில் இனி மல்லிகார்ஜூன் கார்கே புதிய தலைவராக இருப்பார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும் அவர் பல சவால்களை சந்திக்க நேரிடும் என, அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.