பொலிஸுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவிப்பு

அமைதியான போராட்டக்காரர்களை அடக்குவதற்கு பொலிஸ் வளங்களையும், பொலிஸாரையும் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில், லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை இளம் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, அடக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு – லஞ்சம், ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அனுப்பிய பதில் கடிதத்தில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு இலக்கம் BC/1760/ இன் கீழ் மேற்படி விசாரணையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தின் பல உயர்மட்ட அதிகாரிகள் – தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்ததாகவும், பொலிஸ் துறையை அடக்குமுறைக்குப் பயன்படுத்தியதாகவும் – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு செப்டம்பர் 22ஆம் திகதி எழுத்து மூலம் புகார் அளிக்கப்பட்டதாக, இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாகர லியனகே மற்றும் கொம்பனித் தெரு மற்றும் மருதானை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட அதிகாரிகள் குழுவினர் அமைதியான போராட்டங்களை நசுக்க தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்ட அமுலாக்க அதிகாரி, தனது அதிகாரத்தை அல்லது முடிவெடுக்கும் அதிகாரங்களை – ஒரு நபர் அல்லது குழுவுக்கு சாதகமாக செயல்படுவது அல்லது சட்டத்தை ஒரு பாரபட்சமான முறையில் செயல்படுத்துவதற்கு அத்தகைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது ஊழல் என வரையறுக்கப்படுகிறது.
“ஊழல் என்பது சட்ட விரோதமாக நிதி அல்லது சொத்துக்களை கையகப்படுத்துவது மட்டுமல்ல. ஒருவரின் அதிகாரத்தை பக்கச்சார்பான முறையில் பயன்படுத்துவதும் ஊழலாக வகைப்படுத்தப்படுகிறது” எனவும் அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அமைதியான போராட்டங்களை ஒடுக்குவதற்காக பொலிஸ் சேவையின் வளங்களையும் அதன் படையையும் துஷ்பிரயோகம் செய்து ஊழல் குற்றத்தை செய்த குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை ஆரம்பிக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.