மாணவர்களைத் தண்டித்த பிரதியதிபர்; 02 லட்சம் நஷ்டஈடு செலுத்த நீதிமன்றம் உத்தரவு: 10 வருடங்களின் பின்னர் தீர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, இரு மாணவர்களை கடுமையாக தண்டித்த பிரதி அதிபர் – 2 லட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டிய பிரதி அதிபர், அரசியலமைப்பின் 11 வது சரத்தின் படி தனது அதிகாரங்களை மீறி உள்ளதாகவும், இரு மாணவர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்துள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதியாக பிரதி அதிபர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
மாத்தளை மாவட்டத்தின் பல்லே பொல, அக்குரம்பொட – வீர கெப்பெட்டிபொல மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இருவர், பிரதி அதிபரால் மேற்கொள்ளப்பட்ட தண்டனையை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமைக்கான பொறுப்பை மனுதாரர்கள் ஏற்றுக் கொண்டதன் மூலம், பாடசாலையில் ஒழுக்கம் பேணப்படவே தண்டனை வழங்கியதாக அதிபர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மனுதாரர்களுக்கு மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், பாடசாலையில் ஒழுக்கத்தை பேணுவதை நோக்கமாகக் கொண்டு, மாணவர்களிடையே இத்தகைய நடத்தையை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், நல்லெண்ணத்துடனும் மாணவர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் பிரதி அதிபர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மனுதாரர்களினால் முன் வைக்கப்பட்ட மருத்துவ சான்றுகள், மனுதாரர்களின் உடல் மற்றும் மன நிலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக உறுதி செய்யப்பட்டு குறித்த இழப்பீடை வழங்க நீதிமன்றம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் புவனேக அலுவிஹாரே, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்னவினால் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் வாதிகள் சார்பில் சட்டத்தரணி சாந்த ஜயவர்தன ஆஜராகி இருந்தார்.
நன்றி: அரச தகவல் திணைக்களம்