தலைப்புச் செய்திகள்

கோதுமை மா விலை: குறையும் என்றார் அமைச்சர்; கூட்டுகிறது நிறுவனங்கள்

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று (04) தெரிவித்துள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசு அமுல்படுத்துவதன் காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே இலங்கையின் இரண்டு முதன்மை கோதுமை மா நிறுவனங்களும் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 13 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாண் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரத்தில் கோதுமை மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 250 ரூபாவினால் குறைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

இருந்தபோதிலும், கோதுமை மாவின் விலையை மேலும் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.