
அரசாங்கத்துடன் தான் இணைந்து செயற்படுவதற்கு மு.கா தலைவர் ரஊப் ஹக்கீமே காரணம் என்றும், அவ்வாறிருக்கையில் விசாரணைகள் எவையுமின்றி தன்னை மு.காங்கிரஸில் இருந்து நீக்கி விட்டதாகக் கூறி, நாட்டை எவ்வாறு ஹக்கீம் தவறாக வழிநடத்த முடியும் எனவும், அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேள்வியெழுப்பியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸை விட்டும் நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்றும், ‘அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன்’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற, அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் விவரம் வருமாறு;
2020 ஓகஸ்ட் 05 ம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன வெற்றி பெற்று இரண்டு மாதங்களுக்கு பின், 2020 ஒக்டோபர் மாதமளவில்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்புமனுவினூடாக தற்போதைய நாடாளுமன்றத்துகக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை, தற்போது அதிகாரத்திலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனஅரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஊப் ஹக்கீமுடைய தீர்மானமே காரணமாகும்.
அவ்வாறிருக்கையில் முறையான விசாரணைகள் எவையுமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து என்னை திடீரென நீக்கிவிட்டதாகக் கூறி, ரஊப் ஹக்கீம் எவ்வாறு இந்த நாட்டை தவறாக வழிநடத்த முடியும்?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதோஅல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் அனுமதி இன்றி, தற்போது நமது அயல் நாடொன்றில் இலங்கையின் தூதுவராக இருக்கும் தனது நண்பருடன் ரஊப் ஹக்கீம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் உறுதியான புரிந்துணர்வுக்கும் ரஊஊப் ஹக்கீம் வந்ததை அவரால் மறுக்க முடியுமா?
2020 ஒக்டோபர் 18ஆம் திகதி ரஊப் ஹக்கீமுடைய கார்னிவல் அலுவலகத்தில் ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவுடன் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் சந்திப்பு நடத்தியதை அவர் மறுக்க முடியுமா?
குறித்த சந்திப்பில் ரஊப் ஹக்கீமின்அழைப்பின் பேரில் நான் உட்பட பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ் மற்றும் எம்.எஸ். தெளபீக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன், எங்கள் அனைவரையும் 20வது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறும் எங்களை ரஊப் ஹக்கீம் வேண்டிக் கொண்டார். இதேவேளை அரசாங்கத்துடன் ஹக்கீம் இணைந்து பணியாற்ற விரும்பினாலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவம் விரும்பாது என்றும், கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகும் என்பதாலும் அவரால் அவ்வாறு செய்ய முடியாமல் உள்ளதாக ஹக்கீம் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவை அமோக வெற்றியுடன் நாடாளுமன்றத்துக்கு அனுப்பியிருப்பதாலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எனது வாக்காளர்களின் நலன் கருதியும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில் உடன்படுகிறேன்.
அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல் கட்சியின் தலைமையின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரை நம்பி 20வது திருத்தத்துக்கு வாக்களித்தேன். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தத்தின் காரணமாக, விளக்கமளிக்க வருமாறு ரஊப் ஹக்கீம் என்னை அழைத்தார்.
ஆனால் பொது ஜன பெரமுனவுடன் இணைந்து நான் பணியாற்ற வேண்டும் என்று ஹக்கீம் கட்டாயாப்படுத்தியதற்கு ஏற்பவே, நான் செயற்பட்டதனை ரஊப் ஹக்கீம் நன்றாக அறிந்திருந்ததால் இவ்விடயம் தொடர்பாக ரவூப் ஹக்கீம் என்மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.
நொவம்பர் 3, 2020 அன்று நாடாளுமன்றத்தில் வரவு – செலவுத் திட்டதுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக என்னை முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கி விட்டதாக, இப்போது திடீரென்று ரஊப் ஹக்கீம் கூறுகிறார். குறித்த நீக்கமும் கூட – என்னை நாட்டின் அவசர தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் தனக்கு உதவுமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டு – அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியினை வழங்கியதன் பின்னரே ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் அங்கம் வகிக்குமாறு ஜனாதிபதி அழைத்ததன் பின்னர், தேசிய நலன் கருதி அதனை நான் ஏற்றுக்கொண்டேன்.
இந்த நிலையில் எந்த விசாரணையும் இன்றி என்னை உடனடியாக கட்சியினை விட்டும் நீக்கியதாக கூறப்படும் எந்தத் தகவலும் இதுவரை எனக்கு உரிய வரவில்லை, அவ்வாறு கிடைத்தால் அதற்குத் தகுந்த பதிலளிப்பேன்.



