தலைப்புச் செய்திகள்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு ஆதரவளிக்கப் போவதில்லை: பேச்சாளர் சுமந்திரன் தெரிவிப்பு

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிபெற்றதன் பின்னர் – என்ன நடக்கும் என்பது உறுதியாகத் தெரியாவிட்டால், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்து வருவதால், ஜனாதிபதி முதலில் பதவி விலக வேண்டும் என்பதே தங்களின் முதன்மையான கோரிக்கை என டெய்லி மிரருக்கு அவர் கூறியுள்ளார்.

“தற்போதைய நெருக்கடி நிலைக்கு முழுப் பொறுப்பும் ஜனாதிபதியே. அவர் முதலில் பதவி விலக வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றி பெற்றதன் பின்னர், எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் ஏதுமின்றி – இன்னுமொரு அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாங்கள் இதுவரை பார்க்கவில்லை எனவும், அது தொடர்பில் எவரும் தங்களுடன் கலந்துரையாடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்திருந்ததோடு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாகவும் தமக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.