
நாட்டின் பணவீக்கம் 11.1 சதவீதமாக கடந்த நொவம்பர் மாதம் அதிகரித்துள்ளதென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் அமைந்த, ஆண்டு சராசரி முதன்மைப் பணவீக்கம், கடந்த மாதம் 6.2 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டுக்கு ஆண்டுப் பணவீக்கம் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.
முதன்மைப் பணவீக்கம், கடந்த ஒக்டோபர் மாதம் 8.3 சதவீதத்திலிருந்து நொவம்பரில் 11.1 சதவீதத்துக்கு அதிகரித்தது.
அதேவேளை, ஆண்டு சராசரி அடிப்படையில், தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண், கடந்த ஒக்டோபர் மாதம் 5.7 சதவீதத்திலிருந்து நொவம்பர் மாதம் 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது கடந்த ஒக்டோபர் மாதம் 11.7 சதவீதத்திலிருந்து, நொவம்பர் மாதம் 16.9 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம், குறித்த காலப்பகுதியில் 5.4 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.
முறையே 2.61 சதவீதமாகவும், 0.53 சதவீதமாகவும் காணப்பட்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த நொவம்பர் மாதம் 3.14 சதவீதத்தினைப் பதிவுசெய்தது.
அதற்கமைய, உணவு வகையினுள் காய்கறிகள், அரிசி, பால்மா, பெரிய வெங்காயம், மீன் மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் அதிகரித்தன.
அத்துடன், பிரதானமாக உணவகம் மற்றும் விடுதிகள், மதுசார வகைகள் மற்றும் புகையிலை துணை வகைகளில், மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகையில் உள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.



