“அப்படிச் செய்வதற்கு நான் முட்டாள் அல்ல”: குற்றச்சாட்டுகளை மறுத்தார் லொஹான் ரத்வத்த

🕔 September 17, 2021

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவாகியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பாக தன்மீது சுமத்தப்பட்டிருக்கம் அனைத்து குற்றச்சாட்டுகளையும், ரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் தொடர்பான கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மறுத்துள்ளார்.

மது போதையில் வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளுக்குள் நண்பர்களுடன் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிடச் செய்ததார் எனவும் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ள லொஹான் ரத்வத்த; அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தான் ‘முட்டாள் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து முதல் முறையாக மௌனம் கலைத்த லொஹான் ரத்வத்தை; அநுராதபுரம் சிறையில் உள்ள கைதிகளை தான் மிரட்டவில்லை என்றும், வழக்கமான சோதனை நடவடிக்கைக்காக மட்டுமே சிறைக்குச் சென்றதாகவும் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலை தூக்கு மேடைக்கு தான் சென்றதை ஏற்றுக் கொண்ட லொஹான் ரத்வத்த; அங்கும் வழக்கமான சோதனைக்காகவே சென்றதாகக் கூறியுள்ளார். அப்போது தான் குடிபோதையில் இருக்கவில்லை என்றும், தனது பெண் நண்பி உள்ளிட்ட நண்பர்களுடன் தான் அங்கு சென்றதாகக் கூறப்படுவதையும் மறுத்துள்ளார்.

சிறைச் சாலைக்குள் நடைபெறும் போதைப்பொருள் செயல்பாடுகள், கொலைகள் மற்றும் கைத்தொலைபேசி போன்ற பொருட்களைக் கடத்துதல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களை தான் கட்டுப்படுத்தி நிறுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (12) நிகழ்ந்த சம்பவங்களை விளக்கிய அவர்; சிறைச்சாலைக்குள் என்ன நடக்கிறது என்று விசாரித்து அறியும் பொருட்டு, வழக்கமான சோதனைக்காக முன்னறிவிப்பின்றி சிறைக்குச் செல்லும் அதிகாரம் ராஜாங்க அமைச்சர் எனும் வகையில் தனக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஏனைய சிறைச்சாலைகளை சோதனையிடுவதற்காகச் செல்வது போன்றுதான் 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்கும் சென்றேன். அங்கு நான் எந்த கைதியையும் அச்சுறுத்தவில்லை. அது என்னுடைய வேலையுமல்ல” என்றும் ரத்வத்த குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள லொஹான், இது தொடர்பான உண்மையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ரத்தினக்கல் மற்றும்ஆபரணங்கள் தொடர்பான தொழில்கள் ராஜாங்க அமைச்சராக, தான் தொடர்ந்தும் பணியாற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் லொஹான் ரத்வத்தயை கைது செய்யுமாறு, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சிறைச்சாலை நிர்வாக ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த ராஜிநாமா: ஆனாலும் அமைச்சராக பதவி வகிப்பார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்