றிஷாட் பதியுதீனை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம்: அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் வேண்டுகோள்

🕔 May 5, 2021

டுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவர அனுமதிக்க வேண்டாம் என்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில், றிஷாட் பதியுதீன் நாடாளுமன்றுக்கு அழைத்துவரப்படாமை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு சபாநாயகரிடம் கோரினார்.

எவ்வாறாயினும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்ற ஒருவரை அவர் மீதான விசாரணை நிறைவடையும் வரையில் நாடாளுமன்றுக்கு அனுமதிக்க வேண்டாம் என்று தாம் கோருவதாக அமைச்சர் சரத் வீரசேகர சபாநாயகரிடம் கூறினார்.

இதற்கு எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல உரையாற்றும்போது; றிஷாட் பதியுதீனை நாடாளுமன்றுக்கு அழைத்துவரும் விடயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரசாங்கத்தினால் 03 வெவ்வேறான காரணங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அதேநேரம், குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்; அமைச்சர் சரத் வீரசேகர வெளியிட்ட கருத்தினை முதன்முறையாக தாம் கேள்வியுறுவதாகவும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவரை நாடாளுமன்றில் அனுமதிக்க முடியாது என்று கூறுவது, வரப்பிரசாதத்தை மீறும் செயல் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவ்வாறு அரசாங்கத்துக்கு வேண்டாத ஒருவரை ஏதேனும் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்து நாடாளுமன்றுக்கு சமூகமளிக்க விடாமல் செய்து, அவரது உறுப்புரிமையை பறிப்பதாக இந்த கருத்து அமைவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதனை அடுத்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா; அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்துக்கு கண்டனத்தை தெரிவித்தார்.

பின்னர் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான்; றிஷாட் பதியுதீனுக்கு கடந்த திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனைகளுக்கான முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய அமைச்சர் சரத் வீரசேகர; நாட்டின் தேசியப்பாதுகாப்பு கருதி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதான எவரையும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என்று மீண்டும் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்