பிரதித் தவிசாளர் பதவி கிடைப்பதில் உவைஸுக்கு துரோகம்; இடையில் புகுந்து ‘குழி’ வெட்டினாரா நசீர்?
– அஹமட் –
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸுக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் – இந்த துரோகத்தை செய்ததாகவும், உவைஸுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதித் தவிசராளராகப் பதவி வகித்த எம்.எஸ்.எம். ஜவ்பர், தனது உறுப்புரிமையிலிருந்து அண்மையில் விலகிக் கொண்டார். இதனையடுத்து, பிரதித் தவிசாளர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டது.
உவைஸ் கோரிக்கை
இந்த நிலையில் பிரதித் தவிசாளர் பதவியை தனக்கு வழங்குமாறு, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமை நேரில் சந்தித்து, பிரதேச சபையின் தற்போதைய உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான மூன்று தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உவைஸ் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, கட்சிக்குள் தனக்கு பிறகு வந்த பலர் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வரை வகிக்கும் போது, தான் இன்னும் பிரதேச சபை உறுப்பினராகவே உள்ளதாகவும், ஆகக் குறைந்தது பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் பதவியை வழங்கியாவது, தன்னை கௌரவிக்க வேண்டிய கடப்பாடு கட்சிக்கு உள்ளதாகவும், மு.காங்கிரஸ் தலைவரிடம் உவைஸ் கோரியிருந்தார்.
இதன்போது, உவைஸின் கோரிக்கைக்கு மு.கா. தலைவர் ஹக்கீம் சாதகமான சமிக்ஞை காட்டியிருந்ததாக அறிய முடிகிறது.
இணக்கம் தெரிவித்த றியா மசூர்
இது இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மசூர் சின்னலெப்பையின் மகனும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தற்போதைய உறுப்பினருமான றியா மசூரும் பிரதித் தவிசாளர் பதவியை தனக்கு வழங்குமாறு, மு.கா. தலைவரை சந்தித்து கோரியிருந்தார்.
இதன்போது, சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் பிரதித் தவிசாளர் பதவியை வழங்குவதாயின் உவைஸுக்கே வழங்க வேண்டும் என்று, மு.கா. தலைவர் ஹக்கீம் றியாவிடம் கூறியதாகவும், அதற்கு; “பிரதித் தவிசாளர் பதவியை உவைஸுக்கு வழங்குவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை” என்று, றியா மசூர் கூறியதாகவும் தெரியவருகிறது.
இடையில் புகுந்த நசீர்
ஆக, அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் பதியை உவைஸுக்கு வழங்குவதற்கு மு.காங்கிரசின் தலைவர் விருப்பத்துடன் இருந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை அமைப்பாளருமான ஏ.எல்.எம். நசீர் இடையில் புகுந்து, அதற்கு வேட்டு வைத்ததாக உவைஸுக்கு நெருக்கமான தரப்புகள் கூறுகின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் 2011ஆம் ஆண்டில்தான் முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார். அந்த வருடமே, அவர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரானார். அந்தப் பதவி முடிவதற்கிடையில் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தற்போது மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
அச்சம்
இந்த நிலையில், அட்டாளைச்சேனையில் தன்னை விடவும் கட்சியில் சிரேஷ்டத்துவம் உள்ள எவருக்கும் முக்கிய பதவிகள் எவையும் கிடைக்கக் கூடாது என்பதில், நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் குறியாக இருப்பதாக கட்சிக்குள் இருக்கும் சிரேஷ்டமானவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த அடிப்படையில்தான் உவைஸுக்கு கிடைக்கவிருந்த பிரதித் தவிசாளர் பதவியை நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
நசீர் இவ்வாறு நடந்து கொண்டமை காரணமாக, பிரதேச சபை உறுப்பினர் உவைஸ் கடுமையான மனக்கசப்பில் உள்ளதாகத் தெரியவருகிறது.
“அட்டாளைச்சேனையில் கட்சியில் தன்னை விடவும் சிரேஷ்டமானவர்கள் எவருக்காவது முக்கிய பதவிகள் எவையும் கிடைத்தால், அது – தனது அரசியலுக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று நசீர் அச்சப்படுகிறார், அதனால்தான் அவர் – இவ்வாறான குழிபறிப்புகளிலும் வெட்டுக்குத்துகளிலும் இறங்கியுள்ளார்” என்று, உவைஸுக்கு நெருக்கமான தரப்பு கள் விசனம் தெரிவிக்கின்றன.