சண்முகா கல்லூரி ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்; கண்டு பிடிக்குமாறு, பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

🕔 April 26, 2018

– எப். முபாரக் –

திருகோணமலை சண்முகா  இந்து மகளிர் கல்லூரி ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னணியில் உள்ளவர்களை உடனடியாக கண்டுபிடிக்குமாறு திருகோணமலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை, திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்பும் இதனைக் கோரிக்கையாக பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் முன்வைத்துள்ளார்.

திருகோணமலை சன்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை சம்மந்தமாக, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மதும பண்டார ஆகியோருக்கிடையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் இன்ரான் கருத்துத் தெரிவிக்கையில்;

“இந்த கல்லூரியில் நடந்தாக கூறப்படும் பிரச்சினையை அதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வொன்றை கண்டிருக்க முடியும். ஆனால் இவ்வாறானதொரு ஆர்பாட்டத்தை நடத்த வேண்டிய தேவை யாருக்கு ஏற்பட்டது.

அந்த ஆர்பாட்டத்தில் ஏந்தியிருந்த பதாதைகள் இந்த ஆர்பாட்டத்தின் நோக்கத்தை தாண்டி இனவாதத்தையே பிரதிபலித்தது. ஆகவே இந்த பிரச்சினையைப் பயன்படுத்தி யாராவது அரசியல் லாபம் தேட முயற்சித்தார்களா என ஆராய வேண்டிய தேவை உள்ளது.

ஏன் எனில் மூவினமும் ஒற்றுமையாக வாழும் இந்த மாவட்டத்தில், இந்த ஆர்பாட்டத்தின் பின் இனவாத கருத்துக்கள் பரப்பபடுகின்றன. முஸ்லிம் ஆசிரியர்கள் தமது கலாசார ஆடை அணிந்து வர மறுக்கப்பட்டுவதால், இன்று முஸ்லிம் பாடசாலைகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடை அணிகலன்களை அணியக்கூடாது என கூறி, இரு இனங்களுக்கு மத்தியில் முறுகல் ஒன்றை ஏற்படுத்த மூன்றாம் தரப்பொன்று முயல்வதாகவே தோன்றுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர் ஆர்பாடட்டம் முஸ்லிம் பிரதேசங்களிலும் நடத்தப்பட்டு இது நாடு முழுவதும் பரவுகின்ற அபாயம் காணப்படுகிறது. இது இரு சமூகங்களுக்கும் மத்தியில் முறுகல் நிலையை தோற்றுவிப்பது மட்டுமல்லாமல், இரு சமூகங்களின் கல்வி நடவடிக்கைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும்.

எனவே இந்த ஆர்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் யார்? இந்த ஆர்பாட்டத்துக்கு பொலிஸாரிடம் அனுமதி பெறப்பட்டதா? அவ்வாறாயின் யாருக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது? என கண்டுபிடித்து, அவர்களுக்கு பின்னால் அரசியல் லாபம் ஏதும் உண்டா என விசாரித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் திருகோணமலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் இதே போன்ற ஒரு பிரச்சினை சிறிஜயவர்தனபுர ஜனாதிபதி வித்தியாலயத்திலும் ஏற்பட்டு அது உயர் நீதிமன்றம் வரை சென்றதுது.  அதன்போது, அந்தந்த மதத்தவர் தமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை அணிவதில் எந்த தடையுமில்லை என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்தமை நினைவுகூறத்தக்கது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்