அம்பாறை – கொழும்பு மாவட்டங்களில் முஸ்லிம்களின் கல்வித்தரம், மலையும்‌ மடுவும்போல் உள்ளது: ஹக்கீம்

🕔 April 26, 2018
ம்பாறை மாவட்டத்திலும் கொழும்பு மாவட்டத்திலும் அண்ணளவாக ஒரேயளவான முஸ்லிம்கள் இருந்தாலும், அவற்றுக்கிடையான கல்வித்தரம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்போல இருப்பதாக மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீனின் பன்முகப்படுத்தப்பட்ட 11 லட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு அல்-ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கான நுழைவாயிலை திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறுகையில்;

“அரசியல் தலைமைகள் பின்தங்கிய பாடசாலைகளை கண்டுகொள்வதில்லை என்ற பெரிய குறைபாடு இருக்கிறது. முஸ்லிம்கள் அதிகமாக வாழும் கொழும்பு மாவட்டத்தில் பாடசாலைகள் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. இவற்றுக்கான காரணங்களை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் கொழும்பிலுள்ள முஸ்லிம்களும் அண்ணளவாக ஒரே எண்ணிக்கையிலேயே இருக்கின்றனர். இரு மாவட்டங்களிலும் 03 லட்சம் முஸ்லிம்கள் இருக்கின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 17 முஸ்லிம் பாடசாலைகள், அம்பாறை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 100 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றின் தரம் மலைக்கும் மடுவுக்கும் இருப்பதுபோல வித்தியாசமாக உள்ளது. இதை ஒப்பீட்டு ரீதியாக பார்கின்றபோது எங்கு பிழை நடந்திருக்கின்றது என்பதை முதலில் பார்க்கவேண்டும்.

மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துபோகவில்லை. ஆனால், மாணவர்கள் பல்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் தரமான பாடசாலைகளுக்கு தங்களது பிள்ளைகளை அனுப்புகின்றனர். அவ்வாறு வாய்ப்பு கிடைக்காதவர்கள் தங்களது பிள்ளைகளை இப்படியான பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர்.

இந்த நிலைமை மாறவேண்டுமென்றால், முதலில் பாடசாலையில் அடிப்படை பௌதீக வளத் தேவைப்பாடுகள் தொடர்பில் ஒரு மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அதுதான் பாடசாலைக்குரிய அபிவிருத்திக்கான நுழைவாயிலாக இருக்கின்றது.

பாடசாலைகளை வளப்படுத்துவதற்கு அதிபருக்கு கைகொடுக்கின்ற ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் எல்லோரும் ஒருமித்து செயற்பட்டால் நிச்சயமாக பாடசாலை முன்னேற்றமடையும்.

நகர திட்டமிடல் அமைச்சினூடாக, அல்-ஹிஜ்ரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு முன்னாலுள்ள நடைபாதையை மேல் மாகாணசபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன் ஊடாக அமைத்து தருவவதுடன், என்னால் முடியுமான சகல உதவிகளையும் பாடசாலைக்கு செய்து கொடுப்பேன்” என்றார்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்