ஊடகவியலாளர் சுல்பிகாவுக்கு அநீதி; பின்னணியில் பிரதியமைச்சர் ஹரீஸ்

🕔 March 20, 2018

– அஹமட் –

டகவியலாளரும், ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப், கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் விகிதாசார உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாமை குறித்து அப்பிரதேச மக்கள் தமது விசனங்களைத் தெரிவித்துள்ளனர்.

கல்முனை மாநகரசபைக்கான தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில்தான் இம்முறை முஸ்லிம் காங்கிரசிஸ் போட்டியிட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியல்  வேட்பாளராக  ஊடகவியலாளரும் ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப்பினுடைய பெயரும் இடம்பெற்றிருந்து. மட்டுமன்றி, அவரை பட்டியல் உறுப்பினராக நியமிப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேர்தல் பிரசார மேடைகளில் ஏறி சுல்பிகா உரையாற்றி வந்ததோடு, வாக்கு திரட்டும் நடவடிக்கைகளிலும் களத்தில் இறங்கிச் செயற்பட்டார்.

இந்த நிலையில், தற்போது கல்முனை மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்காக கிடைத்துள்ள 04 விகிதாசார பட்டியல் ஆசனங்களுக்காக, 02 முஸ்லிம் பெண்களும், 02 தமிழ் பெண்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஊடகவியலாளரும் ஆசிரியையுமான சுல்பிகா ஷெரீப்பினுடைய பெயர் இடம்பெறவில்லை. இதன் மூலம் சுல்பிகாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு – மாறு செய்யப்பட்டுள்ளதோடு, மு.காங்கிரசுக்காக களத்தில் இறங்கி பணியாற்றிய அவருக்கு துரோகமிழைக்கப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, முஸ்லிம்கள் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களும், பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் நெருங்கிய உறவுக்காரர்கள் எனவும் தெரியவருகிறது.

அந்த வகையில், சுல்விகாவுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை அபகரித்து, தனது உறவுக்காரப் பெண்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் வழங்கியுள்ளதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், முஸ்லிம்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய 04  பட்டியல் உறுப்பினர்களில் 02 உறுப்பினர்களை பறிகொடுத்துள்ள பிரதியமைச்சர் ஹரீஸ்; தனது உறவுக்காரப் பெண்களை பட்டியல் உறுப்பினர்களாக்குவதில் மட்டும் குறியாக இருந்துள்ளார் எனவும் கல்முனை பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

தொடர்பான செய்தி: ஹரீஸ் துரோகமிழைத்து விட்டார்; கல்முனை மக்கள் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்