மெனிக்ஹின்ன பகுதியில் மட்டும், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 885 கோடி ரூபாய்; பிரதேச செயலாளர் தெரிவிப்பு

🕔 March 14, 2018

– அஷ்ரப் ஏ சமத் –

மெனிக்ஹின்ன பிரதேச செயலாளா் பிரிவில் மட்டும், கடந்த வாரம் நடைபெற்ற வன்முறையில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட நஷ்டம்  885 கோடி ரூபாய்  என பிரதேச செயலாளா் சமந்தி நாகதென்ன தெரிவித்தார்.

முஸ்லிம்களின் வீடுகள், வாகனங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் பிரதேச செயலக அதிகாரிகள் மதிப்பிட்டு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் எனவும் அவர் கூறினார்.

திகன – ரஜவெல பகுதியில் அமைந்துள்ள மஜ்ஜிதுன் நூர்  ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று செவ்வாய்கிழமை நல்லிணக்க கூட்டமொன்று இடம்பெற்றது. அக்கூட்டத்துக்கு தலைமை தாங்கி உரையாற்றும் போதே, மெனிக்ஹின்ன பிரதேச செயலாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

இக் கூட்டத்தில் திகன பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் தலைவா்கள்இ பிரதேச  பௌத்த குருமாா்கள், முஸ்லிம் மீடியா போரம் தலைவா் என்.எம். அமீன், மெனிக்ஹின்ன, குண்டசாலை, திகன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் மேலும் கூறுகையில்;

“அவசர உதவியாக, பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதற் கட்டமாக  50 ஆயிரம்  ருபாவும்,  முற்றாக சேதமைந்த சொத்துக்களுக்கு  01 லட்சம் ரூபாவும்  நஷ்ட ஈடாக வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனாலும், உங்களுடைய கடை அல்லது  வீடுகளின் முன்வாயிலில்  பொருத்தப்பட்ட ஒரு கதவு  அல்லது யன்னலின் இழப்புக்கே இந்த நஷ்ட ஈடு போதாது” என்றார்.

அங்கு வருகை தந்திருந்த வலுக்காராம விகாரதிபதி உரையாற்றுகையில்;

“தற்போது  வளர்ந்து வரும் இளைஞர் பரம்பரையினர், வித்தியசமான ஒரு யுகத்தில் வாழ்கின்றனா்.  எமது பழங்கால  பரம்பரையினரிடையே இருந்த ஐக்கியம், அந்நியோன்யம், நட்பு முறைகள் தற்போதைய இளம் பரம்பரையினருக்குத் தெரியாது.

அவா்கள் செய்த இந்த நாசகார செயல்களினால்  நாட்டுக்கு ஏற்படும் இழுக்குகள் பற்றி சிந்திப்பதில்லை.  அவா்கள் புதிய நவீன சமூக வலையத்தளங்களில் கவரப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு, வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

முஸ்லிம்கள்  எவ்வித பிரச்சினைகளும்  இல்லாத அமைதியான சமுகத்தினர். அவா்கள்  தத்தமது தொழில், வியாபாரத்தினைக் கவனித்துக் கொண்டு  ஐந்து  நேரமும் பள்ளிவாசலுக்குச் சென்று மதக் கடமைகளை  சரிவர  நிறைவேற்றியவாறு அமைதியாக வாழும் சமூகத்தினராவர்.

முஸ்லிம் மக்களோடு பழைய பரம்பரையினராகிய நாங்கள், கல்வி கற்கும் காலம் தொட்டு மிகவும் அந்நியோன்னியமாக வாழ்ந்து வருகின்றோம். அந்த உறவுகள், நட்புகள் மற்றும் ஐக்கியம் ஆகியவை தற்போதைய இளம்  சமுகத்தினருக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்