அம்பாறை தாக்குதல்; சந்தேக நபர்களுக்கு பிணை; தனிப்பட்ட பிணக்கு என வழக்குப் பதிவு: பிரதிவாதிகளுக்கு பரிந்து, பொலிஸாரே பேசிய புதினம் அரங்கேற்றம்

🕔 March 2, 2018

– அப்துல் காதர் –

ம்பாறை நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, இன்றைய தினம் வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த ஐவரும், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில், அம்பாறை பொலிஸார் ஆஜர் செய்தபோதே, அவர்களுக்கு பிணை வழங்கி, நீதிவான் உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேக நபர்கள் ஐவரும் ஐந்து லட்சம் ரூபாய் சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டனர்

வழக்கு விசாரணைகள் பரபரப்பான சூழ் நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணியின் பிறகு ஆரம்பமாகின. சுமார் இரண்டுமணித்தியாலங்கள்
வரை வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்ற பின்னர், குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, எதிர்வரும் மார்ச் மாதம் 13 ம் திகதிக்கு இந்த வழங்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.

பாரபட்சம்

அம்பாறை நகரில் கடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பாக 08 குற்றங்களின் கீழ் வழக்குகள் தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பிரகாரம் மேற்படி 08 வழக்குகளில் 04 வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அந்த 04 வழக்குகளில் ஒரு வழக்கின் சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நகரிலுள்ள உணவகத்தைத் தாக்கிமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழங்கின் சந்தேக நபர்கள்தான் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யயப்பட்டு, பிணை வழங்கப்பட்டனர்.

அம்பாறையில் நடைபெற்ற இனவாதத் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சர்வதேச அரசியல் குடியுரிமை சம்பந்தமான பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்ட போதும், இன்று ஆஜர் செய்யப்பட்டவர்களுக்கு எதிராக,  தனிப்பட்ட ரீதியான பிணக்கு எனும் அடிப்படையிலேயே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மரபை மீறிய பொலிஸார்

அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கியமை, மற்றும் ஏனைய குற்றச் செயல்களை புரிந்தமைக்கு எதிரான வழக்குகள், பொலிஸாரினால் தனித்தனியாகவே தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேவேளை, இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குமாறு, பொலிஸாரே நீதிமன்ற மரபுகளுக்கு முரணாக பரிந்து பேசியதாக சட்டத்தரணிகள் விசனம் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சட்டத்தரணிகள் முஹைமின் காலித் , ரதீப் அஹமட் மற்றும் ஹஸ்ஸான் ருஷ்டி ஆகியோர் பிரதிவாதிகளுக்கு எதிராக  ‘குரல்கள் இயக்கம்’ சார்பில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

பொலிஸாரையும், எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளையும் நூற்றுக்கணக்கான சிங்கள மக்கள் நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்த வேளையில், துணிவுடன் களமிறங்கிய இந்த சட்டத்தரணிகள் பாராட்டுக்குரியவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்