பௌத்த மதகுருமார் உட்பட 500க்கு மேற்பட்டோர் சூழ்ந்திருந்தனர்; அம்பாறை நீதிமன்றத்தின் பதட்டமான சூழ்நிலை: விபரிக்கிறார் சட்டத்தரணி றுஷ்தி

🕔 March 2, 2018

– அஹமட் –

ம்பாறையில் நடைபெற்ற இனவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 05 சந்தேக நபர்களும், இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, குறித்த சந்தேக நபர்களுக்கு சார்பாக – பொலிஸார் பக்கச் சார்புடன் நடந்து கொண்டதாக, இன்றைய வழக்கில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரான  ஹஸ்ஸான் றுஷ்தி தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் இன்றைய தினம் நீதிமன்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பாக, சட்டத்தரணி றுஷ்தி, அவருடைய பேஸ்புக் பக்கத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார்.

அதனை வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

நீதிமன்றம் தொடங்கியதிலிருந்து சிங்கள மக்களும் பௌத்த மதகுருமார்களுமாக,  500க்கு மேற்பட்டோர் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்தனர். இதுவொரு பதட்டமான சூழ்நிலையினை உருவாக்கியிருந்தது.

அம்பாறை நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை அம்பாறையில் இடம்பெற்ற வன்முறை தாக்குதல்கள் தொடர்பாக நான்கு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக குரல்கள் இயக்கத்தின் பங்களிப்புடன் சட்டத்தரணிகளான முஹைமின் காலித், ஹஸ்ஸான் றுஷ்தி மற்றும் றதீப் அகமட் ஆகியோர் பங்கேற்றிருந்தோம்.

இவ்வழக்குகளில் – காசிம் ஹோட்டலை தாக்கிய வழக்கில் மாத்திரமே 05 நபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர். பள்ளித்தாக்குதல் உட்பட்ட ஏனைய வழக்குகளில் இதுவரை எவ்வித சந்தேக நபர்களும் அடையாளம் காணப்படவில்லையென்றும் விசாரணைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குமாறும் பொலிஸார் நீதிமன்றில் கேட்டிருந்தனர்.

ஆயினும், நீதவானால் பிணை வழங்க முடியாத இனவெறித்தாக்குதல் குற்றமாக  இச்சம்பவம் கருதப்பட வேண்டும் என்று, முஸ்லிம்கள் சார்பாக சட்டத்தரணிகள் வாதிட்டோம்.

அத்துடன் இதுவரை பொலிஸ் விசாரணை முடிவடையாத காரணத்தினாலும், முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தற்போதும் காணப்படுவதாலும் இவ்வழக்கின் சந்தேக நபர்களை எக்காரணம் கொண்டும் பிணையில் விடக்கூடாது எனவும், எமது வாதத்தினை சமர்ப்பித்திருந்தோம்.

உண்மையில் சட்டத்தரணிகளாகிய எமது பக்கமே நின்று மேற்சொன்னவற்வறினை வலியுறுத்தி பிணை வழங்குவதற்கு ஆட்சேபணை தெரிவித்திருக்க வேண்டிய பொலிஸார், யாரும் எதிர்பார்த்திராத வகையில் சந்தேக நபர்களுக்கு சாதகமான முறையில் செயற்பட்டனர்.

இத்தாக்குதல் சம்பவமானது ஒரு இனவாத செயற்பாடாக கருதப்பட முடியாது என்றும் குறித்த கடையில் ஏற்பட்ட பிரச்சினை தனிப்பட்டதொரு பிரச்சினை என்றும் கூறிய பொலிஸார், நீதவானால் பிணை வழங்க முடியாத சட்டத்திற்குள் (ICCPR Act) இருந்த குற்றங்களை இன்றைய தினம் வாபஸ் வாங்கியிருந்தனர்.

மேலும் வெளி நிலைமைகள் அனைத்தும் சுமூகமாக இருப்பதாகவும் கூறிய பொலிஸார், வழக்கமான நீதிமன்ற மரபுகளுக்கு மாறாக சந்தேக நபர்களை பிணையில் விடுமாறும் கோரியிருந்தனர். சந்தேக நபர்கள் சார்பில் குழுமியிருந்த சட்டத்தரணிகள் குழுவும் இதே வாதத்தினை முன்வைத்திருந்தனர்.

இதனை முற்றாக மறுத்த சட்டத்தரணிகளாகிய நாங்கள், இவ்விடயம் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு புரியப்பட்ட இனவெறித் தாக்குதல் என்றும் இதன் தொடர்கதையாக கடந்த இரவு கூட முஸ்லிம்களுக்கு சொந்தமான பஸ்வண்டி கல்லெறிந்து சேதமாக்கப்பட்டதையும் கூறி, பிணை வழங்குவதற்கு கடுமையான ஆட்சேபனைகளை முன்வைத்தோம். மேலும், பொலீசாரின் பக்கச்சார்பான இச்செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தோம்.

ஆனால் நேற்றைய தினம் பஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையானது, தனிப்பட்ட பஸ் வண்டிகளுக்கிடையிலான பிரச்சினையெனக் கூறி, அந்த விடயத்தையும் பொலிஸார் திசைதிருப்பி விட்டனர்.

இவ்வாறாக இன்று சுமார் 02 மணித்தியாலயங்களுக்கு மேல் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களின் பின்னர், கடும் பிணை நிபந்தனைகளோடு கைது செய்யப்பட்ட 05 பேருக்கும் பிணை வழங்குதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது.

அதேவேளை, வழக்குகளை எதிர்வரும் 13ம் திகதிக்கு ஒத்திவைத்தததுடன் ஏனைய வழக்குகளின் சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்