அட்டாளைச்சேனையில் கூட்டாட்சிக்கு வருமாறு மயிலுக்கு இரு தரப்பு அழைப்பு; தவிசாளர் பதவியை வழங்குவதாகவும் தெரிவிப்பு

🕔 February 11, 2018

– முஸ்ஸப் அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையில் எந்தவொரு தரப்புக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட மயில் சின்ன உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் முயற்சியில் மு.காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகள் மிகத் தீவிரம் காட்டி வருகின்றன.

இதற்கிணங்க, அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் மயில் சின்னத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டத்தரணி எம்.ஏ. அன்சிலுடன் மு.காங்கிரஸ் தரப்பினரும், தேசிய காங்கிரஸ் தரப்பாரும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் இம்முறை யானைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு 08 ஆசனங்களைப் பெற்றுள்ளன. தேசிய காங்கிரஸ் 06 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு மயில் சின்னத்தில் போட்டியிட்டு 03 ஆசனங்களையும் கைப்பற்றிக் கொண்டன. இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ சார்பான தாமரை மொட்டு சின்னத்தில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்கும் பொருட்டு மு.காங்கிரசினரும், தேசிய காங்கிரசினரும் தனித்தனியாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னத் தரப்புடன் பேசி வருகின்றனர்.

சட்டத்தரணி அன்சிலுடன் மு.கா. தரப்பினர் பேசிய நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள யு.கே. ஆதம்லெப்பையும் இன்று பிற்பகல் அன்சிலை நேரடியாகச் சந்தித்து, அவரின் ஆதரவை மு.காங்கிரசுக்கு கோரியிருந்தார்.

இதேவேளை, தேசிய காங்கிரசினரும் அன்சிலுடன் பேசி வருகின்றனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் அதில் கூட்டிணைந்துள்ள கட்சிகளின் தலைவர்கள் பேசி, இறுதி முடிவை எடுப்பர் என, தன்னுடன் பேசியவர்களுக்கு அன்சில் தெரிவித்துள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்ன உறுப்பினர்கள் தம்முடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு முன்வருவார்களாயின், தவிசாளர் பதவியினை சட்டத்தரணி அன்சிலுக்கு வழங்குவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், மு.காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், ரஊப் ஹக்கீம் தலைமை வகிக்கும் மு.காங்கிரசோடு இணைந்து கூட்டாட்சி அமைப்பதற்கு, தான் ஒருபோம் தயாரில்லை என்று, தன்னுடன் பேசிய மு.காங்கிரஸ் தரப்பாரிடம் அன்சில் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், தேசிய காங்கிரசுடன் இணைந்து மயில் தரப்பினர் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கூட்டாட்சி அமைப்பதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்