அம்பாறை மாவட்டத்தில் மு.காங்கிரஸ் படு வீழ்ச்சி; எந்தவொரு சபையிலும் மு.கா. தனித்து ஆட்சியமைக்க முடியாத அவலம்

🕔 February 11, 2018

– முன்ஸிப் அஹமட் –

ம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 08 உள்ளுராட்சி சபைகளில், எந்தவொரு சபையிலும் மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் உருவாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் உள்ளுராட்சி சபைகளில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டது.

இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 05 உள்ளுராட்சி சபைகளில், கடந்த முறை மு.காங்கிரஸ் தனித்து ஆட்சியமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆயினும், நேற்று நடைபெற்ற தேர்தல் முடிவுகளுக்கிணங்க, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினைக் கொண்ட 08 சபைகளில், அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை ஆகியவற்றில் முன்னாள்  அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் தனியாக ஆட்சியமைக்கும் நிலைவரம் ஏற்பட்டுள்ளது,

ஆயினும் ஏனைய 06 சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக பொத்துவில், அட்டாளைச்சேனை, நிந்தவூர், மற்றும் இறக்காமம் பிரதேச சபைகளிலும், கல்முனை மாநகரசபையிலும் தனியொரு கட்சியாக அதிக வட்டாரங்களை யானைச் சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ள போதும், அந்த சபைகளில் முஸ்லிம் காங்கிரசுக்கு தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் உருவாகியுள்ளது.

அதேவேளை, சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் யானைச்  சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தலா எட்டு ஆசனங்களைப் பெற்றுள்ளமையினால் அங்கும் தனித்து எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க முடியாததொரு நிலைவரம் உருவாகியுள்ளது.

எனவே, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிர் முகாம்களிலிருந்து அரசியல் மேற்கொண்டு வரும் கட்சிகளும், குழுக்களும் இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மையினைக் கொண்ட சபைகளில் கூட்டாட்சி அமைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள உள்ளுராட்சி சபைகளில், மு.காங்கிரசுக்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள்  ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்கும் நிலைவரம் உருவாகுமானால், அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு சபையிலும் மு.காங்கிரசினால் ஆட்சியமைக்க முடியாததொரு நிலைவரும் உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்