சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியலும், கரையோர மக்களுக்கு காது குத்த வரும் ஹக்கீமும்

🕔 January 18, 2018

– மப்றூக் –

மு.காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானை, தேர்தல் காலப்பகுதியொன்றில் ராஜிநாமா செய்ய வைத்தமையானது, மக்களை ஹக்கீம் அடி முட்டாள்களாக நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை பறையடித்துக் கூறுவது போல் உள்ளது.

சல்மானிடம் தற்காலிகமாக கொடுத்து வைத்துள்ளேன் என்று ஹக்கீம் கூறிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, இரண்டரை வருடங்கள் சல்மான் அனுபவித்துள்ளார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியற்ற வாகனக் கோட்டாவினை சல்மான் பெற்றுள்ளார். அதன் பெறுமதி பல கோடி ரூபாய்களாகும். இன்னும், ஏராளமான வரப்பிரசாதங்களையும் அவர் அனுபவித்து விட்டுத்தான் ராஜிநாமா செய்திருக்கிறார்.

சல்மான் ராஜிநாமா செய்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது, யானை விழுங்கி விட்டு, மலத்துடன் கழித்த விளாங்காய்க்கு ஒப்பானதாகும்.

அது ஒருபுறமிருக்க, தேர்தல் காலத்தில் சல்மான் வசமிருந்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்துள்ள ஹக்கீம், அந்தப் பதவிக்கு தேர்தல் காலத்தில் யாரையாவது நியமிப்பதானது, தேர்தல் கால லஞ்சமாகவே இருக்கும்.

இருந்தபோதும், தற்போது வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் காலத்தில் யாரையாவது ஹக்கீம் நியமிக்கத் தேர்மானித்தால், அதை அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கே வழங்குவார் என்கிற எதிர்பார்ப்பும் அரசியல் அரங்கில் உள்ளது.

ஆனாலும், அட்டாளைச்சேனையில் இந்த பதவியைப் பெறுவதற்காக மூன்று பேர் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றனர். ஆனாலும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் நசீருக்கு அந்தப் பதவி கிடைப்பதற்கான சாத்தியங்களே அதிகமாக உள்ளது.

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டால், தேசியப்பட்டியல் வழங்குவதாக ஹக்கீம் வாக்குறுதியளித்த ஓட்டமாவடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு அது ஏமாற்றத்தைக் கொடுக்கும். அந்த ஊர்களிலுள்ள மு.காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தலைமையுடன் முரண்படுவார்கள். தேர்தல் காலத்தில் சும்மா கிடக்கும் சங்கை ஊதிக் கெடுக்கும் வேலையாகவே இது இருக்கும்.

இதையெல்லாம் ஹக்கீம் அறியாமலுமில்லை. எனவே, சல்மான் ராஜிநாமா செய்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, தேர்தல் முடியும் வரை யாரையும் நியமிக்காமல், காட்டாப்பு காட்டும் வேலையைச் செய்யும் திட்டமும் ஹக்கீமிடம் இருக்கலாம்.

கழுதைக்கு கரட் காட்டுவது போல், வெற்றிடமாகவுள்ள தேசியப்பட்டியல் பதவியை தேர்தல் முடியும் வரை நிரப்பாமல் வைத்திருப்பது கூட, ஹக்கீமுடைய திட்டமாக இருக்கலாம்.

வெற்றிடமாகி கிடக்கும் தேசியப்பட்டியலைப் பார்த்து, எச்சில் ஊற – நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு, அனைத்து ஊர்களும் தேர்தலை உசாராகச் செய்ய வைப்பதற்கான ஹக்கீமுடைய திட்டமாகவும் இது இருக்கலாம்.

எது எவ்வாறாயினும், தேர்தல் நடப்பதற்கு முன்னர், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மு.கா. தலைவர் யாருக்கும் வழங்குவரை, தேர்தல்கள் ஆணைக்குழு தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் உள்ளன.

தேர்தல் காலத்தில் தேசியப்பட்டியலை ஓர் ஊருக்கு ஹக்கீம் வழங்குவாராயின், அந்த ஊர் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான, தேர்தல் லஞ்சமாகவே அது இருக்கும். எனவே, தற்போது வெற்றிடமாகியுள்ள தேசியப்பட்டியலுக்கு தேர்தல் காலத்தில் யாரையும் நியமிக்காமல் தேர்தல் ஆணைக்குழு தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளில் நியாயங்கள் நிறையவே இருக்கின்றன.

இதேவேளை, சல்மானை ராஜிநாமா செய்ய வைத்து விட்டு, வெற்றிடமாகியுள்ள  தேசியப்பட்டியலுடன், அம்பாறை மாவட்ட கரையோர மக்களுக்கு, காது குத்த வருகிறார் ஹக்கீம் என்று, சமூக வலைத்தளங்களில் பலரும் சாடி எழுதி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மு.காங்கிரசுக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும், அப்போதும் சரி – இப்போதும் சரி, தனது சுயநலத்துக்காகவே ஹக்கீம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்