தலைப்புச் செய்திகள்

ஜெயலலிதா சிசிக்சை பெறும் வீடியோ வெளியானது; தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று, இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

20 விநாடிகளைக் கொண்ட அந்த வீடியோவில், ஜெயலலிதா நைட்டி அணிந்தபடி பழச்சாறு அருந்தும் காட்சிகள் உள்ளன.

அந்த வீடியோவை டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டார்.

மேற்படி வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“ஜெயலலிதா மரணத்தைக் குறித்து பல்வேறு சந்தேகங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.  அவர் உயிருடன் இருந்தபோது அவர் முன்னால் நிற்கவே பயந்தவர்கள் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர். ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறி அவதூறு பரப்பிவருகின்றனர்.

அம்மா இப்படி ஒரு சூழலில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிட எங்களுக்கு விருப்பமில்லைதான். ஆனால், தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளை எங்களால் பொறுக்க முடியாமல்தான் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம். அம்மாவின் தோழி வி.கே. சசிகலாதான் இந்த வீடியோவை எடுத்தார்.

இந்த வீடியோவை இப்போது வெளியிட தேர்தல் அரசியல் காரணம் அல்ல. விசாரணை ஆணையம் எங்களை விசாரணைக்கு அழைத்தால் ஒத்துழைப்பு தருவோம் என ஏற்கெனவே கூறியிருந்தோம். எங்களை அழைக்கவில்லை . அதனால் நாங்கள் அங்கே எதையும் ஒப்படைக்க வாய்ப்பில்லை.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது, நான் ஒருநாள்கூட உள்ளே சென்றதில்லை.

ஆனால், எடப்பாடி பழனிசாமி, உதயகுமார், ஜெயகுமார், ஓபிஎஸ் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளே சென்றனர். மேலதிக கிச்சைகளுக்காக ஜெயலலிதாவை எங்கு அழைத்துச்செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசித்த வீடியோவும் உள்ளது.

ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சித்தாலும் நாங்கள் விடமாட்டோம். இந்த வீடியோ போன்று பல ஆதரங்கள் தங்களிடம் உள்ளது; தேவைப்பட்டால் வெளியிடுவோம்” என்றார்.

நீளும் சர்ச்சைகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று தொடங்கிய சர்ச்சை இன்னும் முடியவில்லை.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கப்பட்டார் என, இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாகக் குழு இயக்குநர் டொக்டர் பிரதாப் ரெட்டி கூறியிருந்தார். இந்நிலையில்தான், இன்றைய தினம் மேற்படி வீடியோ வெளியாகியுள்ளது.

முன்பே சொன்ன தினகரன்

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தரப்பினர் கூறியபோதெல்லாம், டிடிவி தினகரன்; “எங்களிடம் வீடியோ ஆதாரங்கள் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சையே அளிக்கப்பட்டது. அவர் அந்த வீடியோக்களில் ஜெயலலிதா நைட்டியில் இருக்கிறார். ஒரு முதல்வராக இருந்தவரை அந்த கோலத்தில் பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள் என்பதாலேயே அதை வெளியிடவில்லை. இருப்பினும், தேவைப்பட்டால் அந்த வீடியோவை வெளியிடுவோம்” எனக் கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை தேர்தல்,  இன்று வீடியோ

நாளை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இன்று புதன்கிழமை இந்த வீடியோ வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவை இப்போது அவர்கள் வெளியிடக் காரணம் ஆர்.கே. நகர் தேர்தலில் லாபம் தேடுவதற்காகத்தான் என, விமர்சிக்கப்படுகிறது.

ஜெயலலிதாவுக்கான சிகிச்சையை சசிகலா தரப்பினர் ரகசியமாக வைத்திருந்தது ஏன் என்ற கேள்விக்கு, இந்த வீடியோவை வெளியிட்டதன் மூலம்  முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இன்னும் சிலர் கூறுகின்றனர்.

மேலும், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா தரப்பின் மீதான களங்கத்தைப் போக்கிக்கொள்ளும் முயற்சியாகவும், மக்கள் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கையாகவும் இந்த வீடியோவை வெளியிட்டமைக்கான காரணமாக மக்கள் பார்க்கின்றனர்.

வீடியோ