கழுத்தறுப்பு அரசியலுக்கு பலினார் பஹீஜ்; வெட்டுக் குத்துகளுக்கு மத்தியில் அக்கரைப்பற்று தேர்தல் களம்

🕔 December 15, 2017

– முன்ஸிப் அஹமட் –

முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசின் கொள்கை பரப்புச் செயலாளரும், நடைபெறவுள்ள அக்கரைப்பற்று மாநகரசபைக்கான மேயர் வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவருமான சட்டத்தரணி எம்.எம். பஹீஜ், வேட்பாளர் பட்டியிலுக்குள் சேர்க்கப்படாமையானது, உள்ளுர் அரசியல் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாஉல்லாவின் நெருக்கத்துக்குரியவராக அறியப்பட்ட பஹீஜ், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் போட்டியிடுவார் என்றும், அவருக்கே அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் பதவி வழங்கப்படும் எனவும் கட்சிக்குள்ளும், வெளியிலும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

அக்கரைப்பற்று மாநகரசபைக்குரிய ‘பட்டிணப் பள்ளி வட்டாரம்’ என அறியப்படும், 10ஆம் வட்டாரத்தில், பஹீஜ் களமிறக்கப்படுவார் என கடைசி வரை பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று முன் தினம் புதன்கிழமை, அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலுக்கான தேசிய காங்கிரஸின் வேட்புமனு தயாரிக்கப்பட்டது. அதன்போது, சட்டத்தரணி பஹீஜ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட 10ஆம் வட்டாரத்துக்குரிய வேட்பாளராக, அதாஉல்லாவின் இளைய மகன் டில்சான் என்பவர் பெயர் குறிக்கப்பட்டார். மேலும், அந்த வேட்பாளர் பட்டியலில் பஹீஜுக்கு இடம் வழங்கப்படாமலும் தவிர்க்கப்பட்டது.

இந்த நடவடிக்கையானது தேசிய காங்கிரசுக்குள்ளும், அக்கரைப்பற்று பிரதேச அரசியலிலும் பாரிய அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக  ஏமாற்றத்துக்குள்ளாகியிருக்கும் சட்டத்தரணி பஹீஜ், தொடர்ந்தும் அதாஉல்லாவின் தேசிய காங்கிரசில் இணைந்து செயற்படுவதற்கான சாத்தியங்கள் குறைந்துள்ளதாகவும் அறியக் கிடைக்கிறது.

அக்கரைப்பற்று மாநகரசபைக்கான தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் இரண்டு புதல்வர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று மாநகரசபை மேயராக கடந்த முறை, அதாஉல்லாவின் மூத்த புதல்வர் அஹமட் சகி – பதவி வகித்திருந்தார் என்பதும் நினைவுகொள்ளத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்