சிவனொளிபாத மலைக்கான பருவ கால யாத்திரை, இன்று ஆரம்பம்

🕔 December 3, 2017

– க. கிஷாந்தன் –

சிவனொளிபாத மலைக்கான 2018ஆம் ஆண்டுக்குரிய யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

சிவனொளிபாத மலையானது கடல் மட்டத்திலிருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு, கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் நம்பப்படுகிறது.

அதேவேளை, இந்துக்களின் நம்பிக்கைகளின்படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு, இஸ்லாமியர்கள் இதனை முதல் மனிதரான ஆதம் நபியின் (ஆதாமின்) காலடி சுவடாக நம்புகின்றார்கள்.

ரத்தினபுரி – பெல்மதுளை கல்பொத்த ரஜமகா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக இன்று ஞாயிற்றுக்கிழமை மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக, சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்தமுறையும் 03 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.

அந்தவகையில் பலாங்கொடை – பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, ஹட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது.  மற்றைய ஊர்வலம் குருவிட்ட – ரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது.

மேற்படி சிவனொளிபாதமலைக்கு வருகை தரும் யாத்திரிகர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு, நல்லதண்ணி நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை முன்னிட்டு ஹட்டன் – நல்லதண்ணி புகையிரத இணைப்பு பஸ் சேவை ஹட்டன் டிப்போவினால் நடத்தப்படுகிறது.

ரத்தினபுரி வழியாகவும், ஹட்டன் வழியாகவும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரையை மேற்கொள்ள முடியும்.

மலைக்குப் பயணிப்போர் மது அருந்துதவோ, எந்த விதமான இசைக்கருவிகளையும் கொண்டு செல்லவோ முடியாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அதிக எண்ணிக்கையிலானோர், இங்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்