அரசாங்கத்திலிருந்து வெளியேறும் நோக்கம் கிடையாது; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா திட்டவட்டம்

🕔 November 29, 2017
“ராஜாங்க அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து விட்டு, நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாக சில இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் எந்தவித உண்மைத்தன்மையும் கிடையாது. அவ்வாறு அரசை விட்டு வெளியேறுகின்ற தேவையோ – நோக்கமோ எனக்கு இல்லை” என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

சிங்கள பத்திரிகையொன்றில் வெளியான செய்தியொன்றை மேற்கோள் காட்டி சில இணையதளங்கள் ‘ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளார்’ என்று தவறான செய்தியொன்றை வெளியிட்டிருக்கின்றன. இது தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில்  ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பிலுள்ள முஸ்லிம் அமைச்சர் ஒருவரும், ராஜாங்க அமைச்சர் ஒருவரும் அரசாங்கத்திலிருந்து வெளியேறவுள்ளதாகவும், அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியிருந்ததாகவும் நேற்று செவ்வாய்க்கிழமை சிங்கள பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இதனை மேற்கோள் காட்டி சில இணையதளங்கள் தமது ஊகங்களுக்கு ஏற்றவாரு குறித்த செய்தியை திரிவுபடுத்தி வெளியிட்டிருந்தன. அதில் எனது பெயரை இணைத்து நானும் அரசிலிருந்து வெளியேறவுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான ஒரு செய்தியாகும் என்பதை மிகவும் பொறுப்புணர்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவ்வாறு நான் சந்திக்கவுமில்லை, சந்திக்க வேண்டிய தேவையும் இல்லை.  நான் கடந்த ஒரு வாரம் கிழக்கு மாகாணத்திலேயே இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தேவையோ – நோக்கமோ எனக்கில்லை. அத்துடன், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி மஹிந்த அணியுடன் இணைய வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை.

நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்து வருகின்ற முயற்சிகளுக்கு பக்கபலமாகவே நான் இருக்கின்றேன். தொடர்ந்தும் அவ்வாறே இருப்பேன். அத்துடன், கட்சியின் ஒற்றுமைக்காகவும் என்னால் முடிந்த பங்களிப்பினை வழங்கி வருகின்றேன்.

தேர்தல் காலம் நெருங்கும் வேளையில் இவ்வாறு பொய்யான தகவல்களை பரப்பி எனக்கு எதிராக சேறு பூசுகின்ற செயற்பாடுகளை சில சக்திகள் மேற்கொண்டுள்ளன. இணையதளங்களில் என்னை தொடர்பு படுத்தி இந்த செய்தியை வெளியிட்டமை அரசியல் நோக்கமுடையதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்