அத்துரலியே ரத்ன தேரருக்கும் – கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ரகசிய உடன்பாடு

🕔 January 18, 2017

Athuraliye rathna - 011தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் சபையில் சுயாதீனமாக செயற்பட போவதாக அறிவிப்பதற்கு முன்னர், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துரலியே ரதன தேரர் இதற்கு முன்னரும் கோட்டாவுடன் ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியமான பேச்சுவார்த்தை ஒன்றில், அசோக அபேவர்தன என்பவரும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அத்துரலியே ரதன தேரர், இதற்கு முன்னர் பல காலமாக அங்கம் வகித்து வந்த ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இருந்தும் விலகியே இருந்து வருகிறார்.

இந்த நிலையில், ரதன தேரருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான தொடர்புகளில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவே, கோத்தபாய ராஜபக்ஷவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டதாக பேசப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட ரதன தேரர், அதனை பயன்படுத்தி தகுதியற்ற பலரை அரச நிறுவனங்களுக்கு நியமித்துக்கொண்டார்.

பதவியில் இருந்து நேற்று நீக்கப்பட்ட இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மைத்திரி குணரத்ன, ரத்ன தேரர் நியமித்த தகுதியற்ற நபர்களில் ஒருவர் என கூறப்படுகிறது.

தேசிய ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த திரைப்பட இயக்குனர் சோமரத்ன திஸாநாயக்கவும் இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் ஒருவராவார். ஆயினும், அவர் அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அத்துரலியே ரதன தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமாகி, அவரை திரைக்கு பின்னால், இருந்து இயக்க முயற்சித்துள்ளதுடன் அந்த முயற்சி தோல்விடைந்தாக தெரிவிக்கப்படுகிறது.

விஷமற்ற நாடு என்ற தேசிய அமைப்பின் தலைவராக அத்துரலிய ரதன தேரரை நியமிக்காத ஜனாதிபதி, விவசாய துறைசார்ந்த நிபுணரை நியமித்தார்.

இதனையடுத்தே ஜனாதிபதிக்கும் ரதன தேரருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இனவாத நிலைப்பாடுகளை கொண்ட அத்துரலியே ரதன தேரர், ஒரு காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து செயற்பட்டார்.

அங்கிருந்து விலகி ஜாதிக ஹெல உறுமய கட்சியில் இணைந்து கொண்டார். தற்போது அதில் இருந்து விலகியுள்ள அவர், சுயாதீனமான தேசிய சக்தி ஒன்றை உருவாக்க போவதாக கூறியுள்ளார்.

இவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments