இனவாதச் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் தொடர்கின்றமை குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

🕔 December 5, 2016

 

risgad-anuradapura-015– சுஐப். எம். காசிம் –

ஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு வருவதில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முழுப்பங்களிப்பினை நல்கிய போதும், ஆட்சி மாற்றத்தினை அவர்கள்  ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறியுள்ளதா என்ற வினாவுக்கான விடையை ஒவ்வொரு முஸ்லிம் மகனும் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

அனுராதபுரம் விவேகானந்தா கல்லூரியில் மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இஷாக் ரகுமான் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் நவவி, மக்கள் காங்கிரசின் கல்விப் பணிப்பாளர் டொக்டர் ஷாபி, கட்சியின் முக்கியஸ்தர் தாரிக், உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் எம். எம். அமீன், அமைச்சரின் இணைப்பாளர் முத்து முகம்மது உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் உரையாற்றிய போது கூறியதாவது;

வெற்றி கொள்ள முடியாத தலைவர்

“மஹிந்த அரசாங்கத்தை அடுத்தடுத்து இரண்டு முறை பதவியில் இருத்தியதில் நமது சமூகம் முழுமையாக பங்களித்திருக்கின்றது. எவராலும் வெற்றிகொள்ள முடியாதென கருதப்பட்டுவந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பின்னர் நாட்டிலே அமைதியைத் தோற்றுவித்தவர் மஹிந்த ராஜபக்ஷ. அவரது இரண்டாவது பதவிக் காலத்தில் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்சென்றார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் நிலையை ஏற்படுத்தி  அழிந்து போன இந்த நாட்டை அவர் கட்டியெழுப்புவாரென  நாங்களும் திடமாக நம்பினோம். யுத்த வெற்றியின் பின்னர் சிங்கள மக்கள் மத்தியிலே அவர் ஓர் அரசராக, அதற்கும் ஒருபடி மேல் சென்று சில பாமர சிங்களவர்களினால் கடவுளாகக் கூட அவர் போற்றப்பட்டார். அவ்வாறான ஒருவரின் ஆட்சிக் கட்டிலை யாருமே அசைத்துக்கூட பார்க்க முடியாது என்ற நிலை இருந்தது.

இந்தக் கால கட்டத்திலேதான் நாசகாரக் கூட்டமொன்று அழிவுப்பாதையை நோக்கி முன்னகர்ந்தது. சிறுபான்மை மக்களை குறிப்பாக முஸ்லிம்களை குறிவைத்து அந்த இனவாதக் கூட்டத்தின் தலைவன் ஞானசார தேரர் தாக்கினார். இஸ்லாத்தையும் பெருமானாரையும் குர்ஆனையும் இழிவுபடுத்தி, ஹலால் உணவையும் பர்தா உடையையும் மோசமாக விமர்சித்து பேயாட்டம் ஆடினார். முஸ்லிம்களை பல்வேறு கோணங்களில் நிந்தித்தார் எனினும் மஹிந்த அரசு அதனைப் பார்த்துக் கொண்டு கண்டும் காணாதது போல் இருந்தது. முஸ்லிம்கள் கொதிப்படைந்தனர், கவலையடைந்தனர். ஞானசார தேரரை அடக்குமாறு அமைச்சரவையில் நாங்கள் பல முறை வலியுறுத்திய போதும், மஹிந்த அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. தம்புள்ளையில் தொடங்கி தர்கா நகர் வரை, அவரது அட்டகாசங்கள் தொடர்ந்தன. இதனாலேயே நமது சமூகம் ஆட்சிமாற்றத்தை விரும்பியது.

ஆட்சி மாற்றத்தை விரும்பிய முஸ்லிம்கள்

 

மஹிந்த ராஜபக்ஷவின் பலமான ஆட்சிக்கு மத்தியில், ஜக்கிய தேசியக் கட்சி தாக்குப் பிடிக்காத, நினைத்தும் பார்க்க முடியாத ஒரு காலகட்டமே அது இருந்தது. அந்தக்கட்சிக்குள்ளே பல்வேறு குழப்பங்கள்  நிலவின. தலைவருக்கும் பிரதித் தலைவருக்குமிடையே குடுமிச் சண்டைகளும் கயிறிழுப்புக்களும் நடந்தன. இந்த நிலையிலேயே நமது சமூகம் ஆட்சி மாற்றத்துக்காக துணிந்து செயற்பட்டது.

கட்சி, சின்னம் மற்றும் வேட்பாளர் என்று பாராமல் அவற்றினைக் கிஞ்சித்தும் கருத்திற்கெடுக்காமல் ஆட்சியை வீழ்த்த வேண்டும், அதன் மூலம் சமுதாயம் நிம்மதிபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே, நமது சமூகம் ஒன்றுபட்டது. அத்துடன் அந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய சிறுபான்மைக் கட்சிகளின் தலைமைத்துவங்களும் ஆட்சி மாற்றத்துக்கு தீவிரமாக களத்தில் இறங்கி செயற்பட்டனர். அதன் மூலம் ஆட்சியை மாற்றுவதில் பங்களித்தோம்.

நமது சமுதாயம் தேர்தல் மாற்றத்திற்காகவோ புதிய அரசியல் அமைப்பு தேவை என்பதற்காகவோ நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்துக்கு உச்சளவு அதிகாரங்கள் பாரப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவோ, மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பவில்லை. இனவாத சக்திகளின் கொடூரங்களையும் அராஜகங்களையும் தாங்க முடியாதே நிலையிலேயே இந்த முடிவை எடுத்தது.

நல்லாட்சியிலும் மாற்றமில்லை

 

இனவாதிகளை கட்டுப்படுத்தாத, ஞானசாரரின் இழிந்த செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மஹிந்த அரசாங்கத்தை  கவிழ்த்து, புதிதாக உருவாகும் அரசாங்கத்திலாவது தங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தே, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவையும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசையும் கொண்டுவர உழைத்தனர். எனினும் நமது சமூகம் எதிர்பார்த்த நோக்கத்துக்கு மாற்றமாக இன்று ஞானசார தலைமையிலான இனவாதிகளின் கொட்டம் மீண்டும் அதிகரித்துவிட்டது.

அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் எல்லைகடந்த நிலையில் அவர் கொச்சைப் படுத்துகின்றார். இதனாலேயே எங்கள் கட்சி அவருக்கெதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாட்டொன்றை செய்து, சட்டத்தில் உச்சளவான தண்டனை எது இருக்கின்றதோ அதனைப்  அவருக்குப் பெற்றுக் கொடுங்களென முறையிட்டிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் ஞானசாரதேரர் வடபுலமுஸ்லிம்கள் மீள்குடியேறிய மறிச்சுக்கட்டிக்கு சென்று, கொட்டில்களை பிரித்தெறிந்து கம்புகளை பிடுங்கி வீசி அட்டகாசப்படுத்தினார். அதன் பின்னர் கொழும்பில் எனது அமைச்சுக்குள் நுழைந்து அடாவடித்தனத்தை மேற் கொண்டார். அப்போது எல்லாம் நாம் பொறுத்தே போனோம். எனினும் அண்மையில் அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்தி பேசியதனாலேயே நாங்கள் முறைப்பாடு செய்தோம்.

கட்சி – மார்க்கமல்ல

கட்சியென்பது மார்க்கமல்ல. சுதந்திரத்திற்குப் பின்னர் பச்சைக் கட்சியென்றும், நீலக் கட்சியென்றும், சிவப்புக் கட்சியென்றும் அவற்றினை மார்க்கமென நினைத்து, பித்துப் பிடித்து அலைந்து திரிந்திருக்கின்றோம். ஆனால் அதன் மூலம் நமது சமுதாயத்துக்கு கிடைத்த பலன் என்னவென நாம் எம்மை ஒருமுறை திருப்பி கேட்க வேண்டிருக்கின்றது.

 

அனுராதபுரம் மாவட்டத்தைப் பெறுத்தவரையில் சுதந்திரத்திற்குப் பின்னர் கடந்த பொதுத் தேர்தல் வரை இவ்வாறு நாங்கள் செயலாற்றியதனால், கட்சிக்களுக்காக எமது வாழ்நாளை செலவழித்ததனால் ஏதாவது உருப்படியான நன்மைகள் நமது சமூகத்துக்கு கிடைத்துள்ளனவா?

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நானும், பிரதி அமைச்சர் அமீர் அலியும் இந்தப் பிரதேசத்துக்கு வந்து, உங்களது வாழ்க்கைச் சீரழிவுகளை நேரடியாகக்கண்டு கவலை அடைந்திருக்கின்றோம்.

கடந்த பொதுத் தேர்தலை நாங்கள் சரியாகப் பயன்படுத்தினோம். இந்த மாவட்டத்தில் நாங்கள் இனங்கண்ட தலைவரே சகோதரர் இஷாக். அவர் இறைபக்தியுள்ளவர். யாருக்கும் விலை போகாதவர், சமுதாயத்தில் பற்றுள்ளவர். இதனால்தான் மக்காவில் உம்ரா கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர் இஷாகை தொடர்பு கொண்டு தேர்தலில் போட்டியிட வைத்தோம்.இறைவனின் நாட்டத்தால் வெற்றியடைந்தோம்.

அதே போன்று குருநாகலில் நாங்கள் நிறுத்திய வேட்பாளர் சகோதரர் ஷாபியும், புத்தளத்தில் நவவியும், பேருவளையில் இப்திகாரும் தேர்தலில் விளிம்பில் தோல்வியடைந்த போதும் எங்களைப் பொறுத்தவரையில் அந்த மாவட்ட மக்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகவே நாங்கள் இதனைக் கருதுகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் அற்ப சொற்ப சலுகைகளுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுப்பவர்களும், கட்சியின் கொந்தராத்துக் காரர்களும் தமது செயற்பாடுகளில் இருந்து விடுபடுவார்களேயானால், நமது சமூகம் அரசியலில் இன்னும் பல பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளுமென நாங்கள் நம்புகின்றோம். எங்களை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதே இனவாதிகளின் திட்டமாகவும், யுத்தியாகவும் இருக்கின்றது. எனவே அதற்கு நீங்கள் எவரும் இடமளிக்க வேண்டாம்.

அனுராதபுர மாவட்டத்திற்கு சகோதரர் இஷாக்கினூடாக அவரது சொந்த முயற்சியினாலும், எங்களது உதவியினாலும் இன்னும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். இதற்காக பல மில்லியன் ரூபாய் வரை செலவிடப்படவுள்ளது. சகோதரர் இஷாக்கையும் எமது கட்சியும் பலப் படுத்துவதன் மூலமே உங்களுக்கு எதிர் காலத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.risgad-anuradapura-016 rishad-anuradapura-014

Comments