அக்கரைப்பற்றில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு, நீதிமன்றம் உத்தரவு

🕔 December 5, 2016

Courts order - 01– முன்ஸிப் அஹமட் –

க்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கல்முனையில் அமைந்துள்ள மாகாண மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதான வீதியோரமாக, ரெலிகொம் காரியாலயத்துக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண நடவடிக்கைகளையே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், EP/HCK/Writ/186/2016 எனும் இலக்கத்தினைக் கொண்ட வழக்கு முடியும் வரை, குறித்த கட்டட நிர்மாண வேலைகளை நிறுத்துமாறு கல்முனை – மாகாண மேல் நீதிமன்றத்தினால் – தான் பணிக்கப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் இன்று திங்கட்கிழமை எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.

சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தினை நிர்மாணிக்கும் பொருட்டு, குறித்த இடத்தில் கட்டட நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

ஆயினும், சுமார் 04 கோடி ரூபாய் பெறுமதியான அந்த இடத்தில் வெறும் 40 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடமொன்றினை நிர்மாணித்து, அக்கரைப்பற்றின் காணி வளத்தினை வீணடிக்க வேண்டாம் எனக் கூறி, சில வாரங்களுக்கு முன்னர், மேற்படி கட்டட நிர்மாணத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டிருந்தது.

மேலும், தற்போது சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் நிர்மாணிக்கப்படும் காணியில், நூதனசாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்கு, அக்கரைப்பற்று மாநகரசபையினால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், அதனை பொருட்பாடுத்தாமல், அங்கு சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்துக்கான கட்டடத்தினை நிர்மாணிக்கும் முயற்சி எடுக்கப்படுவதாகவும், அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்திருந்தார்.

இவ்வாறான சூழ்நிலையில், சமூக சேவைத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தினை அமைப்பதற்கான மேற்படி கட்டட நிர்மாண வேலைகளுக்கு, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவில்லை எனத் தெரிவித்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த யு.எல். உவைஸ் என்பவர் கல்முனை – மாகாண மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குக்கு அமைய, குறித்த இடத்தில் மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாண வேலைகளை, வழக்கு முடியும் வரை நிறுத்துமாறு நீதிமன்றத் உத்தரவிட்டுள்ளது.letter-akp-mc-011

Comments

புதிது பேஸ்புக் பக்கம்