மு.கா. செயலாளர் பதவி; சிக்கலைத் தீர்த்துக் கொள்ளுமாறு, தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு

🕔 December 3, 2016

hakeem-011– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலை, இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் தீர்த்து, செயலாளர் அல்லது செயலாளர் நாயகம் என்கிற பதவிகளில் இரண்டிலொன்றினை மாத்திரம் முறைப்படி தாபித்து, தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய – எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே, இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரச்சினை தீர்க்கப்படும் வரையில், அதாவது இம்மாதம் 15 ஆம் திகதி வரையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகிய இருவரின் பெயர்களையும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிரலில், செயலாளர் பதவிக்குரியதாகக் காட்சிப்படுத்தாதிருப்பதற்கு, தாம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகவும் – அந்தக் கடிதத்தில் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் பதவி தொடர்பான சிக்கலைத் தீர்த்துக் கொள்ளத் தவறும் பட்சத்தில், எதிர்வரும் தேர்தல்களின்போது, முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுவதில் சிக்கல் நிலை உருவாகும் போகும் என்பதையும் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில்;

‘ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் கடந்த 07.11.2015 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட யாப்புத் திருத்தத்தின் மூலம், கட்சியில் செயலாளர் நாயகம் மற்றும் செயலாளர் என இரண்டு பதவிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அவற்றில், தேர்தல் அலுவல்களின் போது – செயலாளர் பதவி ஏற்புடையதென அறிவிக்கப்பட்டது. மேலும் இதுவரை செயலாளர் நாயகம் பதவி வகித்த எம்.ரி. ஹசனலிக்குப் பதிலாக, ஏ.சி.ஏ. மொஹம்மட் மன்சூர் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசனலி தனது பெயர் – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் செயலாளர்  பதவி தொடர்பான சிக்கல் தீர்க்கப்படவில்லை.

இதேவேளை, தேர்தல் அலுவல்கள் தொடர்பான நியதிச் சட்ட நடவடிக்கைகளின் போது, நெருக்கடியான நிலைமைகள் தோன்ற முடியுமாகையால், அரசியல் கட்சியொன்று தொடர்பில் செயலாளர் பதவி ஒன்று மட்டும் செல்லுபடியாகும்.

மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், செயலாளர் பதவிகள் இரண்டு அல்லது செயலாளர் மற்றும் செயலாளர் நாயகம் என இரு பதவிகள் கிடையாது’  என தெரிவிக்கப்பட்டுள்ளது.letter-01234

Comments