மு.கா. தலைவர் ஹக்கீம்தான் போலியான சந்தேகத்தை உருவாக்கினார்: தவ்ஹித் ஜமாத் குற்றச்சாட்டு

🕔 November 24, 2016

rasmin-011வ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் அப்துர் ராசிக் கடந்த ஆட்சியில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட தேசிய புலனாய்வு மையத்தின் (NIB) தகவல் வழங்குனதாக செயல்பட்டதாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்த தகவல் பொய்யானது என்று தவ்ஹித் ஜமாத் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அந்த அமைப்பின் துணைச் செயலாளர் எம்.எப்.எம். ரஸ்மின் அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் ராஜிதவின் இந்தக் கூற்றுக்கு அடிப்படையான கருத்தாக்கத்தினை, முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம்தான் உருவாக்கினார் என்றும் தவ்ஹித் ஜமாத்தின் துணைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“அமைச்சரவை அந்தஸ்து பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் முக்கியம் வாய்ந்த பொறுப்பில் இருக்கும் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இது போன்ற கற்பனையான கருத்துக்களை வெளியிடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பினை நிபந்தனைகளை மீறினார் என்கிற குற்றச்சாட்டில்தான் தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வேறு குற்றச்சாட்டுக்கள் எதனையும் அவர் மீது நீதிமன்றம் சுமத்தவில்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேச துரோகமா?

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பு நிறுவனமான தேசிய புனாய்வு பணியகத்துடன் தொடர்புகளைப் பேணுவது தேச துரோகமான எனவும், தவ்ஹித் ஜமாத் துணைச் செயலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“CID, TID, CCD என்று பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போல NIB என்பதும் அரச புலனாய்வுப் பிரிவாகும். அதிலும் குறிப்பாக கடந்த ஆட்சியின் போது, விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதில் தேசிய புலனாய்வுப் பிரிவின் பங்கு மிக மிக முக்கியமானதாகும்.

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் ஒரு முக்கியமான அரச நிறுவனம் என்ற வகையில் – அனைத்து இயக்கங்கங்கள், சங்கங்கள், சிவில் அமைப்புகளுடன் சுமுகமான தொடர்புகளை பேணுவது பாதுகாப்புத் துறையின் வழமையான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

அந்த வகையில் தேசிய புலனாய்வு மையமாக (NIB) இருந்தாலும், CID, TID, CCD என்று அரசு சார்ந்த எந்த நிறுவனங்கள் ஆனாலும், தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் தொடர்பில் எம்மிடம் விசாரிக்கும் போது, அவர்களுக்கு எமது செயல்பாடுகளை தெளிவாக தெரிவிப்பது என்பது – வெளிப்படைத் தன்மை பேணும் ஒரு அமைப்பின் கடமையாகும்.

நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு, ஜனநாயக வழியில் செயல்பட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பால் கேள்விகள் முன்வைக்கப்பட்டால் வெளிப்படைத் தன்மை பேணி எமது செயல்பாடுகள் தொடர்பில் நாம் பாதுகாப்புத் தரப்புக்கு விளக்கம் அளித்திருக்கிறோம்.

NIB என்பது அரசாங்கத்தின் தேசிய புலனாய்வு அமைப்பே தவிர தீவிரவாதிகளின் ஒரு நிறுவனம் அல்ல. அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவுடன் எமது செயல்பாடுகளின் வெளிப்படைத் தன்மைகளை நாம் பேணி வருவதை தவறு காணுவது அல்லது தவறாக சித்தரிக்க முனைவது என்பது, அமைச்சரவை அந்தஸ்து பெற்ற அமைச்சரின் சரியான நடை முறையாக அமையாது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்” என்றும் ரஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.

ஹக்கீம்தான் காரணம்

இது இவ்வாறிருக்க, தவ்ஹித் ஜமாத் மீது, போலியான சந்தேகத்தை தோற்றுவித்தவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் என்றும், மேற்படி அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

“தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டத்துக்கு பின்னர், அந்த அமைப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டு வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம்தான், அமைச்சர் ராஜிதவின் இந்தக் கூற்றுக்கான அடிப்படையான கருத்தாக்கத்தை உண்டாக்கியவராவார்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்பாட்டம் பற்றி கருத்து வெளியிடும் இடங்களிலெல்லாம் முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருடன் தவ்ஹித் ஜமாத்துக்கு தொடர்பிருப்பதாகவும், பொது பல சேனா என்கிற இனவாத அமைப்பும் தவ்ஹீத் ஜமாஅத் என்கிற இஸ்லாமிய பிரச்சார அமைப்பும் ஒருவரால்தான் இயக்கப் படுகிறது என்றும் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டு வருகிறார்.

இது முற்றிலும் பொய்யான கற்பனையின் உச்ச கட்டமாகும். பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர் ஹக்கீம் போன்றவர்கள், அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இதுபோன்ற வங்குரோத்தான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் ஜமாஅத் என்பது முஸ்லிம் சமுதாய பேரியக்கமாகும். இந்த அமைப்பு அன்றுதான் முதன் முதலாக ஆர்பாட்டம் நடத்தியதைப் போல் அமைச்சர் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார். கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக பல விதமான அநியாயங்கள் இனவாதிகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரத்தில், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஆச்சரிய மௌனம் காத்த நேரத்தில் இனவாதத்துக்கு எதிராக குரல் எழுப்பியது தவ்ஹீத் ஜமாஅத் மாத்திரம்தான்.

மேலும், தவ்ஹீத் ஜமாஅத்தை வெளியாட்களின் பணத்தை கொண்டு இயங்குபவர்கள் என்று வீண் பழி சுமத்தி, அரசியல் லாபடையை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முனைவதை ஒரு போதும் அங்கீகரிக்க முடியாது.

தவ்ஹித் ஜமாத்தை, அமைசர் ராஜித சேனாரத்ன – முன்னாள் பாதுகாப்பு செயலாளருடன் தொடர்பு படுத்தியே தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு அடித்தளமிட்டவர் அமைசர் ரவூப் ஹக்கீம்தான்”.

தொடர்பான செய்தி: தவ்ஹித் ஜமாத் செயலாளர் ராசிக், புலனாய்வு பணியகத்தின் தகவலாளி: அமைச்சர் ராஜித தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்