கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

🕔 November 11, 2016

Bus - 012– றிசாத் ஏ காதர் –

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எழுத்து மூலம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்படி குற்றச்சாட்டினை அந்த சங்கம் முன்வைத்துள்ளது.

கல்முனையிலிருந்து வாகரையூடாக திருகோணமலை வரையில் ஏராளமான பஸ் வண்டிகள் சேவையிலீடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குப் புறம்பாக – எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல், மேலும் சில பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே சேவையில் ஈடுபட்டு வரும், பஸ் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டு வருவதாகவும், முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அந்தக் கடிதத்தில்;

‘கல்முனையில் இருந்து வாகரை ஊடாக திருகோணமலைக்கு சேவை புரியும் பஸ் வண்டிகளுக்கு புறம்பாக, சொகுசு பஸ் என்ற போர்வையில் இரண்டு பஸ் வண்டிகளுக்கு கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் ஏலவே இவ்வழி ஊடாக சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றன.

கிழக்கு மாகாண பஸ் உரிமையாளர் சங்கத்தினால் ஏற்கனவே இதுகுறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில், எந்தவித நடவடிக்கையினையும் முதலமைச்சரோ அல்லது அதிகார சபையின் தலைவரோ எடுக்கவில்லை.

மேலும், இப் பயண வழி ஊடாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 13 பஸ் வண்டிகளும், தனியாருக்கு சொந்தமான 21 பஸ்வண்டிகளுமாக, மொத்தம் 34 பஸ ;வண்டிகள் மிக நீண்டகாலமாக சேவையில் ஈடுபடுகின்றன. இங்கு சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளுக்கான நேர இடைவெளியாக 20 தொடக்கம் 30 நிமிடங்களே வழங்கப்பட்டுள்ளன.

இவ்வழியூடாக மிக நீண்டகாலம் நாங்கள் சேவையில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவ்வழி தொடர்பான எந்தவித முன் அனுபவமும் இல்லாத ஒரு நபருக்கு பாதை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்களிடமோ, இலங்கை போக்குவரத்து சபையிடமோ சம்மதம் பெறப்படவில்லை. இவ்விடயத்தினை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையானது, கிழக்கு மாகாண முதலமைச்சரினுடைய அமைச்சின் கீழுள்ள ஒரு அதிகாரசபையாகும். இதற்கான தலைவரை முதலமைச்சரே நியமித்துள்ளார். அந்த வகையில், முதலமைச்சரிடம் இது விடயம் தொடர்பில் நேரடியாக சென்று முறைப்பாட்டினை தெரிவித்தும், முதலமைச்சர் இது விடயத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது தங்களுக்கு சந்தேகத்தினை தோற்றுவிப்பதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசியபோது, சொகுசு பஸ்வண்டிக்கான அனுமதியை முதலமைச்சரே வழங்க உத்தரவிட்டதாக கிழக்குமாகாண வீதிப்போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் குறிப்பிடுகின்றார். முதலமைச்சரிடம் வினவியபோது, தான் அவ்வாறு கூறவில்லை என்கின்றார். ஆகவே தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு இது விடயத்தில் தெளிவான தீர்வொன்றினை வழங்க வேண்டுமெனவும் அச்சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

மேற்;படி வழியூடாக பயணிக்கும் 34 பஸ் வண்டிகளுக்கான நேர இடைவெளிகளாக 20 தொடக்கம் 30 நிமிடம் வரையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேலும் இரண்டு பஸ்வண்டிகளுக்கு வழி அனுமதி வழங்கியிருப்பது சேவைக்காகவா, அல்லது அதிகாரிகளின் நலனுக்காகவா எனவும் பஸ் உரிமையாளர்கள் வினவுகின்றனர்.

மேலும், குறித்த வழி ஊடாக பயணிக்கின்ற சொகுசு பஸ்வண்டிகள், குறுந்தூர பயணிகளையும் ஏற்றிச் செல்வதனை அவதானிக்க முடிவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் தங்களது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இதனால் இவ்வழி ஊடாக சேவையிலீடுபடுகின்ற தமது பஸ்களின் நாளாந்த வருமானம் மிகக்குறைவாக காணப்படுவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கு மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதாக கூறிவருகின்ற முதலமைச்சர், கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் விடயத்தில்; அலட்சியமாக நடந்துகொள்வதாகவும் அச்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, கிழக்கு மாகாண முதலமைச்சர் இது விடயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு, தனியார் பஸ் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்வதுடன், விடயத்தில் அவசரமாக தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இல்லையேல் எதிர்வரும் காலங்களில் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிலைக்கு தாம் தள்ளப்படுவோம் என்றும் அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்