சிஐடி போல் ஆள்மாறாட்டம் செய்து, 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய, பெண் உள்ளிட்ட நால்வர் கைது

🕔 April 30, 2024

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளைப் போல் (சிஐடி) ஆள்மாறாட்டம் செய்து 10 மில்லியன் ரூபாய் லஞ்சம் கோரிய நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று (29) கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அங்கிருந்து முறைப்பாட்டாளரின் 12 மில்லியன் ரூபாய் பணமும், 3,500 அமெரிக்க டொலர்களும் சந்தேகநபர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்பின்னர், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக விசாரணை இருப்பதாகக் கூறியுள்ளனர்.

பின்னர், சந்தேகநபர்கள் வீட்டுக்குச் சென்று அங்கு பணிபுரியும் இந்தியர் ஒருவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்திருந்தனர்.

அதன் பிறகு, முறைப்பாட்டாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சந்தேக நபர்கள், தமக்கு 40 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்குமாறு கேட்டுள்ளனர். அவருக்கு எதிரான விசாரணைக்கு உதவவும், பறிமுதல் செய்யப்பட்ட பாஸ்போர்ட்டை திருப்பித் வழங்கவும் இந்தத் தொகையைக் கோரியுள்ளனர்.

இதன் பின்னர் அந்தத் தொகை 35 மில்லியன் ரூபாயாக குறைக்கப்பட்டதாகவும், ஆரம்ப தொகயாக 10 மில்லியன் ரூபாய் வழங்குமாறும் கேட்டுள்ளனர்.

இதன்படி குறித்த வீட்டில் வைத்து லஞ்சம் பெற முற்பட்ட போது, பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்களை லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் இன்று (30) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்