அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை: நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு

🕔 October 28, 2016

Ranil - 096

த்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டும் தப்பிச் செல்லவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு,  திரும்பிவருவதாக கடந்த வாரம் தன்னிடம் கூறிவிட்டுத்தான், அர்ஜுன் மகேந்திரன் சென்றுள்ளார் எனவும் பிரதமர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை மத்திய வங்கியில் இடம் பெற்ற ஊழல் தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது அர்ஜூன் மகேந்திரன் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுவது உண்மையா? என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே, அவர் இதனைக் கூறினார்.

“அர்ஜூன் மகேந்திரன் தப்பி ஓடவில்லை என்னிடம் கூறிவிட்டே சென்றார். உதயங்க வீரதுங்கவைப் போன்று அவர் ஒன்றும் ஓடிச் செல்லவில்லை என்பதை உங்கள் அனைவருக்கும் கூறிக் கொள்கின்றேன்.

மேலும் நல்லாட்சியின் மூலமாகவே நடைபெற்ற ஊழல்கள் தொடர்பில் அம்பலப்படுத்தப்படுகின்றது. நாடாளுமன்றத்தின் பலத்தினை அதிகரிப்பதே எமது நோக்கம். தற்போது நல்லாட்சியை காப்பாற்ற பலர் உள்ளனர் அதனால் நாம் கவலைப்பட தேவையில்லை.

அதேபோன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 147 பில்லியன் ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அது மறைக்கப்பட்டு விட்டது. இப்போது இங்கே கோஷம் எழுப்பும் எவரும் கடந்த காலத்தில் சத்தம் போடவில்லை.

பிரபல சிங்கள ஊடகம் ஒன்று யாரால் ஆரம்பிக்கப்பட்டது, எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, யாருக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்டது என்பது எமக்கு தெரியும். அதனைப்பற்றி யாரும் பேசவில்லை அந்த ஊடகத்தை ஆரம்பிக்க பணம் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பில் முடிந்தால் யாராவது கேள்வி எழுப்புங்கள் எனவும் பிரதமர் கூறினார்.

பிரதமரின் உரையின் போது கூட்டு எதிர்க்கட்சியினர் சபையை குழப்பும் விதமாக கோஷங்களை எழுப்பினார்கள்.

வரவு செலவுத்திட்ட அறிக்கைக்கு முன்னர், அர்ஜுன் மகேந்திரன் பற்றிய அறிக்கையை விவாதிக்க அனுமதி வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேட்டுக் கொண்டார்.

இதன்போது, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவிக்கையில்; “கடந்த ஆட்சியிலேயே கோப் குழு அறிக்கைகள் குப்பையில் வீசப்பட்டது. ஆனால் தற்போது முழு அறிக்கைகளும் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாம் எவருக்கும் பயப்படவில்லை. முறையான நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Comments