மன்னிப்புக் கோரினார் டொக்டர் அலாவுதீன், முடிவுக்கு வந்தது பழிவாங்கல் ‘கதை’

🕔 October 19, 2016

dr-alavudeen-198
–  சப்னி அஹமட் –

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக, தன்னால் எழுதப்பட்ட கடிதத்தினை வாபஸ் பெறுவதோடு, குறித்த செயற்பாட்டினை மேற்கொண்டமை தொடர்பில் , தான்  – மன்னிப்புக் கோருவதாகவும் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுத்தீன் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபாலவின் உத்தரவிற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அலாவுத்தீன் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நேற்றைய கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது டொக்டர் அலாவுதீன் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீருக்கு எதிராக, கடந்த வாரம் முறையற்ற விதத்தில் ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தினை வாபஸ் பெறுகின்றேன். மேலும், என்னுடைய இந்த நடவடிக்கைக்காக மன்னிப்புக் கோருகின்றேன். இவற்றினை எழுத்து மூலம் இங்கு நான் சமர்ப்பிக்கின்றேன்.

மேலும், நாளை முதல் எனது கடமைகளை எதுவித பிரச்சினைகளுமின்றி, மேற்கொள்ளவுள்ளதுடன், என்னால் வெளியிடப்பட்ட செய்திகளையும் வாபஸ் பெறுகின்றேன்” என்றார்.

மேற்படி கலந்துரையாடலில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் கே. முருகானந்தம், சுகாதார அமைச்சின் செயலாளர் கே. கருனாகரன் மற்றும் உதவிச் செயலாளர் ஜே. உசைனுடீன் ஆகியோர் முன்னிலையில், தனது மன்னிப்புக் கடிதத்தினை டொக்டர் அலாவுதீன் கையளித்ததோடு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை, டொக்டர் அலாவுதீன் கட்டித் தழுவி சமரசம் செய்துகொண்டார்.

மேற்படி பிரச்சினை காரணமாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கப்பட்டு, அதிகாரமற்ற வேறொரு பதவிக்கு நியமிக்கப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, அதற்கான கடிதமும்  அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

முறையற்ற ரீதியில் கொந்தராத்துக்களை வழங்குவதற்கு, தான் துணை போகாமை காரணமாகவே, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து தன்னை அகற்றுவதற்கான பழிவாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ஏற்கனவே, டொக்டர் அலாவுதீன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியிலிருந்து டொக்டர் அலாவுதீன் நீக்கம்

dr-alavudeen-099 dr-alavudeen-1944

Comments

புதிது பேஸ்புக் பக்கம்