
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID), நொவம்பர் 04ஆம் திகதி – நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது.
மேலதிக வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, முன்னாள் ஜனாதிபதியின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சிங்கப்பூரிலுள்ள ஒரு வைத்தியசாலையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அங்கு மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதியும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
இருப்பினும், இந்த வழக்கில் மனுதாரராக உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம், விசாரணையின்போது ஆஜராகவில்லை.
அதன்படி, பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நவம்பர் 4 அன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பல முன்னாள் புலனாய்வு அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.



