
ஞானசார தேரரைக் கைது செய்வதற்கான பிடியாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிறப்பித்துள்ளது. மேலும், அவரை ஒக்டோபர் 01ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார். இதனையடுத்து, அவருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
நீதியரசர்கள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் – இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணை ஆரம்பிக்கப்பட்டபோது, ஞானசார தேரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, தனது கட்சிக்காரர் சுகவீனம் காரணமாக ஓய்வெடுத்து வருவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார். அத்துடன், சட்ட மா அதிபரின் மனுவை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதற்கு மேலதிக கால அவகாசத்தையும் அவர் கோரினார்.
எனினும், சட்ட மா சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இது ஒரு குற்றவியல் வழக்கு தொடர்பான விவகாரம் என்பதைச் சுட்டிக்காட்டியதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினால் பிடியாணை பிறப்பிக்குமாறும் கோரினார்.
மனுவை ஆராய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரி – ஞானசார தேரரின் சட்டத்தரணி விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, வழக்கு நடவடிக்கைகள் சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதிமன்றம் கைதுக்கான பிடியாணையைப் பிறப்பித்ததுடன், ஞானசார தேரரை ஒக்டோபர் 01ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.



