
பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிறுவன கொடுக்கல் – வாங்கல் வழக்கில், நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டதாகும். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இப்போது நான்காவது குற்றவாளியாகப் பட்டியலிடப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட 70 மில்லியன் ரூபாய் லஞ்ச விவகாரம் தொடர்பாக லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ‘கிரிஷ்’ குழுமத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தொழிலதிபருமான ஜானகி சிறிவர்தன, ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் – ஜனாகி சிறிவர்தன செப்டம்பர் 24 அன்று கைது செய்யப்பட்டார்.
‘கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் கொழும்பு (பிரைவேட்) லிமிடெட்’ நிறுவனத்திற்கு கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு (UDA) சொந்தமான ஒரு சொத்தைப் பெற்றுத் தருவதற்கும், அதற்கான அனுமதிகளை விரைவுபடுத்துவதற்கும் உதவியதற்காக, ஜனாகி சிறிவர்தன – மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நாமல் ராஜபக்ஷவிற்கு 70 மில்லியன் ரூபாயை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பான தற்போதைய விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.



