தலைப்புச் செய்திகள்

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான தூதுக்குழு, அனோனுக்காக சஊதி செல்கிறது: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

னோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, இலங்கை அரசு விடுத்த மேல்முறையீட்டுக் கடிதத்தை ஒப்படைப்பதற்காக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான ஒரு தூதுக்குழு, சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அடுத்த வாரம் ஐ.நா. பொதுச் சபையில் சவூதி வெளியுறவு அமைச்சரைத் தான் சந்திக்க உத்தேசித்துள்ளதாகவும், அங்கு மன்னிப்பு வழங்குதல், தண்டனையைக் குறைத்தல் அல்லது சலுகை பெறுதல் போன்ற மாற்று வழிகளுக்காக வலியுறுத்தவுள்ளதாகவும் கூறினார்.

சட்டத் தலையீட்டிற்காக, பிரதிநிதித்துவ சட்ட நிறுவனம் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் ஃபைசர் முஸ்தபா ஆகியோர் தங்கள் சொந்த செலவில் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

இதுவரை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை விவரித்த அமைச்சர், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் – அனோஜனுடன் நேரடித் தொடர்பில் இருப்பதாகவும், தூதரக ஆதரவை வழங்கி வருவதாகவும், அதே நேரத்தில் சவூதி அரேபியாவிலுள்ள உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியமான வழிகள் குறித்து அறிக்கையளிக்கும் பணியும் தூதரகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பான தற்போதைய மற்றும் எதிர்காலச் செலவுகள் அனைத்தையும் அரசு ஏற்கும் என உறுதியளித்துள்ளதாகவும், கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்துடன் ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார். சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்ய ஒரு விசேட ஜனாதிபதி தூதுக்குழுவும் தயாராகி வருகிறது என்றார்.

“இந்த விவகாரம் தொடர்பாக அரசு தனது முழுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்று நாடாளுமன்றத்தில் கூறிய அவர், எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அனுாஜனின் குடும்பத்தினருக்கு விளக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நடவடிக்கைகளைத் தடம் புரளச் செய்யக்கூடிய அல்லது இரு நாடுகளுக்கும் இடையே நல்லிணக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வழக்கின் விவரங்களை வழங்கிய அமைச்சர் விஜத ஹெரத், பதிவு செய்யப்பட்ட புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசா, செப்டம்பர் 2025-ல் சவூதி அரேபியாவுக்குப் பயணம் செய்ததாகக் கூறினார். ஒரு முகநூல் பதிவின் காரணமாக அவர் தனது வேலையை இழந்தார், பின்னர் இஸ்லாத்தையும் சவூதி சட்டத்தையும் அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலை 2, 2026 அன்று கைது செய்யப்பட்டார். ஜூலை 27 அன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் ரியால் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அவர் தனது தவறை ஒப்புக்கொண்டு முகநூலில் ஒரு வீடியோ மன்னிப்புப் பதிவை வெளியிட்டார்.

இலங்கைத் தூதரகம் ஜூலை 31 அன்று தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு, மேல்முறையீட்டு செயல்முறை குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தது. அவரது தந்தை ஓகஸ்ட் 04 அன்று மேல்முறையீட்டிற்குச் சம்மதம் தெரிவித்தார், மேலும் ஓகஸ்ட் 24 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், ஷரியா சட்டத்தின் கீழ் சவூதி அரசாங்கம் செய்த மேல்முறையீட்டைத் தொடர்ந்து, முகமது நபியை அவமதித்ததற்காக நீதிமன்றம் செப்டம்பர் 17 அன்று மரண தண்டனை விதித்தது.

செப்டம்பர் 20 அன்று பெறப்பட்டு, செப்டம்பர் 21 அன்று மொழிபெயர்க்கப்பட்ட எழுத்துபூர்வ தீர்ப்பு, தீர்ப்பை உறுதிசெய்து, அபராதத்தை நிறுத்திவைத்து, அவரது முகநூல் கணக்கை முடக்க உத்தரவிட்டதாக அமைச்சர் விஜித ஹெரத் மேலும் குறிப்பிட்டார்.

சவூதி மற்றும் உள்ளூர் சட்ட வல்லுநர்களுடன் அரசு தற்போது தீர்ப்பை மறுபரிசீலனை செய்து வருவதாகவும், அதே நேரத்தில் அனோஜக்கு சட்ட நிவாரணம் கோருவதற்காக – ராஜதந்திர, துணைத் தூதரக மற்றும் மனிதாபிமான வழிகளைப் பின்பற்றி வருவதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.