தலைப்புச் செய்திகள்

சாதனை மாணவர்களை பாராட்டும், மக்கள் காங்கிரஸின் விருது வழங்கும் விழா: திருகோணமலையில் பிரதம அதிதியாக றிஷாட் கலந்து கொண்டார்

திருகோணமலை மாவட்டத்தில் க.பொ.த. உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவின் ஏற்பாட்டில் நேற்று (11) நடைபெற்றது.

நாடளாவிய ரீதியில் “AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” என்ற திட்டத்தின் கீழ், மாவட்ட ரீதியாக இந்த நிகழ்வு நடந்து வருகிறது.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்ற மாணவர்கள், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் Z-Score அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (11) மாலை கிண்ணியா, முனைச்சேனை பொது மைதானத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளரும், கல்வி விவகாரப் பணிப்பாளருமான டொக்டர் ஹில்மி முகைதீன்பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

விஷேட பேச்சாளராக அல்-ஹிக்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் கலாநிதி அப்பாஸ் இபாதுல்லாஹ் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரைக்கார், கிண்ணியா பிரதேச செயலாளர் முஹம்மட் கனி, கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் அஸ்மி, கிண்ணியா நகர சபையின் பிரதித் தவிசாளர் சனா முஹம்மட், கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் முஜீர் ரஸாதி மற்றும் கட்சியின் அனுராதபுரம் மாவட்ட அமைப்பாளர் அல்-ஹாஜ். தாரிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும், பாடசாலை அதிபர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

சிறந்த கல்வி பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்களின் கல்வி முயற்சிகளைப் பாராட்டி, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்துக்கான “AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” விழா, நாளை (13) அட்டாளைச்சேனையில் காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது.