தலைப்புச் செய்திகள்

பாடசாலை மாணவர்களினுடைய, புத்தகப் பைகளின் பாரம் குறைகிறது: எப்படி என்பதை பிரதமர் விளக்கினார்

லங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடை கணிசமாகக் குறைக்கப்படவுள்ளதாக, பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இதன்படி, 2027 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘அலகு அடிப்படையிலான (module-based) கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாடசாலைப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், இச்சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படும் செயல்பாடு சார்ந்த கற்றல் முறையானது, மாணவர்கள் வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையில் கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று கூறினார்.

முன்மொழியப்பட்டுள்ள இம்முறையின் கீழ், வகுப்பறைச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் பாடசாலையிலேயே வைக்கப்படும்; இதனால் மாணவர்கள் அவற்றை தினமும் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்காது.

தங்கள் பணிகளை நிறைவு செய்த பின்னர், தவணை (term) இறுதியிலேயே மாணவர்கள் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2027 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அலகு அடிப்படையிலான கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பெரிய பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட பாடப்பருவத்திற்கான ஒவ்வொரு பாடத்திற்கும் தொடர்புடைய கற்றல் அலகுகள் (modules) மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இம்மாற்றங்கள் மாணவர்களின் பாடசாலைப் பைகளின் எடையைக் கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகப் பிரதமர் கூறினார்.