தலைப்புச் செய்திகள்

இனவாத மோதல்களற்ற காலமாக, கடந்த இரண்டாண்டுகளை மாற்றியமைக்கு, ஜனாதிபதிக்கு ஜம்இய்யத்துல் உலமா சபை பராட்டு

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு –

ந்தவொரு சமூகத்திற்கும் தமது கலாசார அடையாளம் காரணமாக சமூகத்தில் பாதுகாப்பின்மை அல்லது அச்சம் ஏற்படாத வகையிலான சூழலை உருவாக்குவதும், அவர்களின் உள ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக செயற்படும் இனவாதப் போக்குகள் மற்றும் உள்ளக மோதல்களின் தன்மையை சரியாகப் புரிந்து கொண்டு, மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பது  அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகளுடன் இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் எவ்வித இனவாத மோதல்களும் ஏற்பட இடமளிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். ஊழல் மோசடிகள் தொடர்பிலோ அல்லது சட்டத்தின் ஆட்சியின் ஆதிக்கம் தொடர்பிலோ தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எவ்வித குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாத நிலையில், சில குழுக்கள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர்கள் பாராட்டினர். அதற்குத் தமது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் கூறினர். குறிப்பாக, இளைஞர் சமுதாயத்தைப் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மீட்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘முழுநாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் மற்றும் ஊழலை ஒழிக்கும் வேலைத்திட்டம் என்பன தொடர்பில் இதன் போது பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. 

கடந்த இரண்டு ஆண்டுகளை இனவாத மோதல்கள் அற்ற இரண்டு ஆண்டுகளாக மாற்றியமைத்ததற்காக அரசாங்கத்திற்குத் தமது பாராட்டுக்களைத் தெரிவித்த  உலமா சபை  பிரதிநிதிகள், இருப்பினும் சமூக வலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சுகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினர்.

ஜனநாயக சமூகமொன்றில் ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் மற்றும் தீர்மானங்களைக் கேள்விக்குட்படுத்துவதற்கு மக்களுக்கு முழுமையான உரிமை உண்டு என்பதைத் தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், எனினும் இனங்களுக்கிடையில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கோ அல்லது சமூகத்தில் வெறுப்பைப் பரப்புவதற்கோ எவருக்கும் உரிமையில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் சமூகத்தைக் இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரங்கள் குறித்தும் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அதில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என்றும், அச்செயற்பாடுகளுக்கு  தமது  ஒத்துழைப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டனர்.

இஸ்லாமிய  நூல்கள் மற்றும் கல்வி சார்ந்த விடயங்கள் தொடர்பில் எழுந்துள்ள சில பிரச்சினைகள் குறித்தும் இதன்போது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், பாதுகாப்புத் தரப்பினருடன் இணைந்து அப்பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்தும், தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி அந்நூல்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

அரசியலமைப்பு பேரவை போன்ற தேசிய மட்டத்திலான நிறுவனங்களில் முஸ்லிம் சமூகம் உட்பட அனைத்துச் சமூகங்களினதும் பிரதிநிதித்துவம் காணப்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிட்டார்.

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட சில பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டதுடன், சீருடைப் பிரச்சினை போன்ற தொழில்நுட்ப அல்லது நிர்வாக ரீதியான விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தில் இனவாத அல்லது மத ரீதியான பதற்றங்கள் மீண்டும் தலைதூக்குவதைச் சரியாகப் புரிந்து கொண்டு அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அக்ரம் நூரமித், பதில் தலைவர் அஷ்-ஷைக் எம்.ஜே. அப்துல் ஹாலிக், பொருளாளர் அஷ்-ஷைக் எம்.கே. அப்துர் ரஹ்மான், உப தலைவர்களான அஷ்-ஷைக் எச். உமர்தீன், அஷ்-ஷைக் எம்.எச்.எம். புர்ஹான் உள்ளிட்ட மௌலவிமார்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும், சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.