
அட்டாளைச்சேனை பிரதேச கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக கடல் மண் அகழ்வு நடைபெறுகின்றமையை தடுக்குமாறு – அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைய, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுனில் திஸாநாயக்க, இன்று (07) களத்துக்கு வந்து நிலைமையைப் பார்வையிட்டார்.
அட்டாளைச்சேனை 06ஆம் பிரிவிலுள்ள கடற்கரைப் பகுதியில் – சட்டவிரோதமாக கடல் மண் தொடர்ச்சியாக அகழப்பட்டு வருவதாகவும், இதனால் அந்த இடம் பள்ளமாகியுள்ளதாகவும், அங்கு கடலரிப்பு ஏற்படுவதாகவும் – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் 06ஆம் பிரிவு சிவில் பாதுகாப்பு குழுவினர் முறையிட்டிருந்தனர்.
மேலும், இந்த சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்குமாறும் – பொலிஸ் நிலையம் சென்று, பொறுப்பதிகாரியிடம் சிவில் பாதுகாப்புக் குழுவினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கிணங்க, இன்றைய தினம் – மணல் அகழப்படும் இடத்துக்கு வருகை தந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த இடத்தைப் பார்வையிட்டதோடு, சிவில் பாதுகாப்பு குழுவினரிடம் விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
முன்னர், உழவு இயந்திரப் பெட்டிகளில் மணல் அகழப்பட்டதாகவும், பின்னர் அந்தப் பகுதி மக்களின் எதிர்ப்புக் காரணமாக, பெருமளவானோர் பெரிய உரப்பைகளைக் கொண்டு வந்து, அவற்றில் மண்ணை நிரப்பி எடுத்துச் செல்வதாகவும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சிவில் பாதுகாப்பு குழுவினர் தெரிவித்தனர்.
இதன் பின்னர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் – சிவில் பாதுகாப்பு குழுவினருக்கும் இடையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது“
இதன்போது, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று – அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உறுதியளித்ததோடு, சிவில் பாதுகாப்பு குழுவினரின் அர்ப்பணிப்பான நடவடிக்கையினையும் பாராட்டினார்.




