
வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து சமைத்த உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்தே, இந்த அனுமதி வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லெதென்ன தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷவை, செப்டம்பர் 18ஆம் திகதி வரை- விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுக்குள்ளும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று பேர் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை பார்ப்பதற்காக, அவரின் தாயார் ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (07) காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றார்.



