
போலியான SLS தரச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் நிறுவனமொனறிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8500 குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீதாவாக்க-வில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட இந்தக் குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு, அவிசாவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து (SLSI) தேவையான தரச் சான்றிதழ் உரிமத்தைப் பெறாமலேயே, SLS தரச் சின்னத்தைக் கொண்ட குடிநீர் பாட்டில்களைத் தயாரித்து விநியோகித்ததாகக் கூறி, D.T.S. இன்டர்நேஷனல் (பிரைவேட்) நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளர் – மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்திருந்தது.
சுகாதார அமைச்சு இந்தத் தயாரிப்புக்கு ‘Lanka Premium’ (லங்கா பிரீமியம்) என்ற பெயரை அங்கீகரித்திருந்த போதிலும், அந்நிறுவனம் ‘Aquachill’ (அக்வாசில்) என்ற பெயரில் அந்த நீரைச் சந்தைப்படுத்தியதாகவும் நுகழ்வோர் விவகார அதிகாரசபை குற்றம் சாட்டியுள்ளது.
ஓகஸ்ட் 21, 2026 அன்று நுகர்வோர் விவகார அதிகாரசபை உத்தியோகத்தர்கள் நடத்திய சோதனையின் போது, தவறான லேபிள்களைக் கொண்டதாகக் கருதப்படும் பெருமளவிலான குடிநீர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்டவற்றில் 19 லீட்டர், 5 லீட்டர், 1,500 மில்லி லீட்டர், 1,000 மில்லி லீட்டர் மற்றும் 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட போத்தல்கள் அடங்கும்.
செப்டம்பர் 4 அன்று அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் 40,000 ரூபாய் அபராதம் விதித்தது.
வழக்குச் சான்றுகளாகச் சமர்ப்பிக்கப்பட்ட 8,500-க்கும் மேற்பட்ட போத்தல்கள் அடங்கிய முழு குடிநீரையும் அழிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, நீதிமன்ற வளாகத்திலேயே அந்தப் போத்தல்கள் அழிக்கப்பட்டன.
குடிநீர் போத்தல்களை வாங்குவதற்கு முன், குறிப்பாக அவற்றின் வர்த்தகப் பெயர், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகள் மற்றும் SLS தரச் சின்னத்தின் நம்பகத்தன்மை ஆகியவற்றை கவனமாகச் சரிபார்க்குமாறு நுகர்வோரை – நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டது.
மோசடியான அல்லது சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அறிவிப்பதற்கு, அலுவலக நேரங்களில் நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற அவசர அழைப்புச் சேவை ஊடாக தொடர்பு கொள்ளலாம்.




