தலைப்புச் செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட, 13 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் மூலம் இரண்டு நபர்கள் ஈட்டிய பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும், 130 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு முடக்கியுள்ளது.

எம்பிலிபிட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் – இப்பிரிவிடம் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் இருவருடன் தொடர்புடைய சொத்துக்களில், எம்பிலிபிட்டிய ‘நியூ டவுன்’ (New Town) பகுதியில் அமைந்துள்ள சுமார் 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று மாடி வீடும், ஒரு ஏக்கர் மற்றும் இரண்டு ரூட் (rood) நிலப்பரப்பும் அடங்கும்.

இரண்டாவது சொத்தானது, எம்பிலிபிட்டியவின் பிம்படுகோட (Bimmbadugoda) பகுதியில் 23.7 பேர்ச் நிலத்தில் அமைந்துள்ள மூன்று மாடி வீடாகும். இதன் மதிப்பு சுமார் 60 மில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த வருமானத்தைக் கொண்டே, சந்தேக நபர்கள் இவ்விரு சொத்துக்களையும் வாங்கியுள்ளதாக விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், செப்டம்பர் 7 முதல் 14 நாட்களுக்கு இச்சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பிறப்பித்துள்ளது.