
அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலேயின் தாயார், தனது மகனின் தடுப்புக்காவலை நீடிக்க வேண்டாம் என்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு நேற்று (24) அனுப்பிய கடிதத்தில், தனது மகன் 37 ஆண்டுகள் இலங்கை ராணுவத்தில் பணியாற்றியதாகவும், தனது இளமைப் பருவத்தையும், குடும்பத்துடன் செலவிடக்கூடிய மதிப்புமிக்க ஆண்டுகளையும் நாட்டுக்காக அர்ப்பணித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், எந்தவொரு விசாரணையையும் நிறுத்துமாறு தாம் கோரவில்லை என்று அவர் வலியுறுத்தினார். தனது மகனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் இருக்குமானால், அவற்றை விசாரித்து, கிடைக்கப்பெற்ற சான்றுகளை ஆராய்ந்து, உண்மையை நிலைநாட்டுமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
அதே நேரத்தில், விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், தனது மகனின் தடுப்புக்காவலை மேலும் நீடிக்க வேண்டாம் என்று – ஒரு தாயாக அவர் வேண்டுகோள் விடுத்தார்.
விசாரணைகள் சான்றுகளின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும், சான்றுகளுக்குப் பதிலாக தடுப்புக்காவலைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தாம் எந்தவொரு சிறப்புரிமையையும் நாடவில்லை என்றும், நீதி, மனிதாபிமானம் மற்றும் நியாயமான வாய்ப்பை மட்டுமே நாடுவதாகவும் கூறி, ஜனாதிபதி திசாநாயக்கவைச் சந்திக்க ஒரு வாய்ப்பையும் அவர் கோரியுள்ளார்.
மேலும், தனது மகன் சட்டத்தை சுதந்திரமாக எதிர்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



