தலைப்புச் செய்திகள்

பாதாள உலகத் தலைவனின் மனைவியிடம் 12 கோடி ரூபாய் பெற்ற குற்றச்சாட்டில் விஜயதாச ராஜபக்ஷ மகன் கைது

பாதாள உலகத் தலைவன் ஹரக் கட்டாவின் மனையியிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் ரகித ராஜபக்ஷவை லஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (25) கைது செய்துள்ளது.

இவருடன், ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமார அபேசிங்க மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் வருஷஹென்னதிகே அருண ஸ்ரீ சதுரங்க ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதாள உலகப் பிரபலம் ‘ஹரக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன – குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் இருந்தபோது, அவரின் தடுப்புக் காவலை இல்லாமல் செய்து, அவரை பூசா சிறைச்சாலையைத் தவிர்த்து வேறு சிறைச்சாலையில் வைப்பதற்காக, ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிகா மதுவந்தி என்பவரிடம் 12 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார்கள் எனும் குற்றச்சாட்டில் இவர்கள் கைதாகியுள்ளனர்.

துபாயில் இருந்த ஹரக் கட்டாவின் மனைவியிடம் 50 கோடி ரூபாய் ஆரம்பத்தில் கோரப்பட்டதாக லஞ்ச, ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பின்னர் அந்தத் தொகை 20 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டது

அதன்படி 12 கோடி ரூபாயை முன்பணமாக மேற்படி நபர்கள் பெற்றுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக, லஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரவித்துள்ளது.