
அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் என்ற நாடே இருக்காது. நான் இல்லையென்றால் இஸ்ரேலும் இருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியை சந்தித்து ஜி7 உச்சிமாநாட்டில் பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்;
”அமெரிக்கா இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது. நான் இல்லாமல் இஸ்ரேல் இருந்திருக்காது, ஏனென்றால் நான் செய்ததைச் செய்ய – வேறு எந்த ஜனாதிபதியும் முன்வரவில்லை.
நான் தலையிடாமல் இருந்திருந்தால், இஸ்ரேல் எப்போதோ தகர்க்கப்பட்டிருக்கும்” என்றார்.

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் லெபனான் விவகாரத்தில், இஸ்ரேலியப் பிரதமர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.
“எனக்கு பிபியுடன் (நெதன்யாகு) ஒரு சிறந்த உறவு இருந்தது. ஆனால் இப்போது லெபனான் விஷயத்தில் பிபி இன்னும் பொறுப்புடன் இருக்க வேண்டும்” என்றார்.
“லெபனான் ஒரு காலத்தில் ஒரு சிறந்த நாடாக இருந்தது. அது பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் இருந்த ஒரு நாடாக இருந்தது. மாபெரும் அறிவாளிகள் லெபனானில் இருந்தனர். இப்போது அது மிகவும் மோசமாக இருக்கிறது” என்றார்.
லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேற மறுப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, ட்ரம்ப் பதிலளிக்கையில்; “ஹிஸ்புல்லாவுடன் மிக நீண்ட காலமாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. மேலும் பலர் கொல்லப்படுகிறார்கள். நீங்கள் ஒருவரைத் தேடும் ஒவ்வொரு முறையும் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க வேண்டியதில்லை, ஏனென்றால் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் ஹிஸ்புல்லாவைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்றார்.


